என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்கள் ஏமாற்றப்படுவதாக பாமக சார்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் என்எல்சிக்கு எதிராக மனு கொடுக்கச் சென்ற பாமகவினரை போலீசார் கைது செய்துள்ளது கண்டனத்திற்குரியது என அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''கடலூர் மாவட்டம் பூதங்குடியில் என்.எல்.சி சுரங்கத்திற்கு வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற ரகசிய கலந்தாய்வுக் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக சென்ற பாமகவினர் தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
என்.எல்.சி சுரங்கத்திற்கு நிலம் எடுக்க உழவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்வது அரசின் கடமை. ஆனால் பாமகவினரையும் பொதுமக்களையும் மனு கொடுப்பதற்கு கூட அனுமதிக்காமல் கைது செய்தது அடக்குமுறை ஆகும். அடக்குமுறையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி நிலங்களை பறிக்கலாம் என்று என்.எல்.சியும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் நினைத்தால், அதை மக்கள் முறியடிப்பார்கள். இதை உணர்ந்து என்.எல்.சிக்கான நிலம் எடுப்புப்பணிகளை அரசு கைவிட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.