சனாதன ஒழிப்பு மாநாட்டில் அண்மையில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பேசு பொருளானது.
அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து சனாதனத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தரப்புகளில் இருந்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக பாஜகவினர் உதயநிதியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து சாமியார் ஒருவர் சனாதனத்தை ஒழிப்பேன் என்று சொன்ன உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் 'சனாதானத்தை யாரெல்லாம் அழிக்க பார்க்கிறார்களோ அவர்கள் நாட்டையே உடைக்க பார்க்கிறார்கள்' என பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.