ஆகஸ்ட் 13 அன்று இரவில், தூத்துக்குடி மாநகரின் வடபாகம் காவல் சரக போலீஸ் இன்ஸ்பெக்டரான அருள், எஸ்.ஐ. சிவராஜன் எஸ்.எஸ்.ஐ. சிவசங்கரன் உள்ளிட்ட போலீசார் ஸ்டேட் பேங்க் காலனிப் பக்கம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அது சமயம் டூவீலரில் இரண்டு மூட்டைகளை வைத்துக் கொண்டு வேகமாக வந்த வாலிபரை மடக்கி மூட்டையைச் சோதனையிட்டுள்ளனர். அந்த மூட்டையில் தடை செய்யப்பட்ட போதைப்பாக்கு புகையிலை பாக்கெட்கள் 2,600 எண்ணம் இருந்தது தெரியவர, அவரை வளைத்துக் கொண்டு போய் உரிய லெவலில் விசாரணை நடத்தியிருக்கின்றனர் காவலர்கள். அப்போது பிடிபட்டவர், அதனை ஒரு குடோனிலிருந்து கடைகள் மற்றும் ஏஜெண்டுகளுக்கு சப்ளை செய்யக் கொண்டு செல்வதாக வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்.
பொறி வைத்த இன்ஸ்பெக்டர் அருள், தன் சகாக்களுடன் அதிகாலை தூத்துக்குடி சிப்காட் பகுதியின் குறிஞ்சி நகரிலுள்ள அந்த குடோன் சார்ந்த வீட்டினை முற்றுகையிட்டுச் சோதனை நடத்தியதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுவதற்காகப் பதுக்கப்பட்டிருந்த குட்கா போதைப் புகையிலை ஒன்னேகால் டன்னை கைப்பற்றியுள்ளார். மேலும், போதைப் பொருட்களை மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், 2 ஆம்னிவேன், மற்றும் மினி லாரி உள்ளிட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். அதேநேரம், பதுக்கப்பட்டிருந்த குடோனின் உரிமையாளர் மகாராஜன் மற்றும் தொடர்புடைய கிருஷ்ணராஜபுரம் சோலையப்பன், ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட தடைசெய்யப்பட்ட போதைப் பாக்கெட் புகையிலையின் மதிப்பு 18 லட்சம் என்றால் விற்பனைச் சந்தையில் அதன் மதிப்பு 23 லட்சம் வரை போகும். லாக்டவுண் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பெங்களூரிலிருந்து பிக்-அப் வேன்மூலம் கடத்திவரப்படுகிறது. இங்கு சில்லறை விலையாக பெட்டிக்கடை முதல், பெரிய கடை மற்றும் புரோக்கர்கள் வரை இவைகள் சப்ளை செய்வது பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை சென்றடைகிறது என்கின்றனர் போதை ஆபரேஷனை நடத்திய வடபாகம் போலீசார்.
நகரில் நடந்த போதை வேட்டையில் சிக்கியவைகளைப் பார்வையிட்டு டீமைப் பாராட்டிய மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமார் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் புகையிலைக் கடத்தியும், விற்பனையும் செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றார் எச்சரிக்கையாக. இது முத்துநகர் வரலாற்றில் நடந்த மிகப் பெரிய “ஆபரேஷன் கிக்” என்று சொல்லப்படுகிறது.