தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் சர்வே நம்பர் 139, 214, 266, 337 ஆகிய அரசு ஓடை புறம்போக்கு வகைப்பாட்டில் உள்ள நிலங்கள் ஸ்ரீபூவனநாத சுவாமி திருக்கோயில் தேவஸ்தான பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் கோயில் கட்டுப்பாட்டில் 106 கடைகளும், தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் 25 கடைகளும் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன. இதனை அகற்ற வலியுறுத்தி கோவில்பட்டி நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு மீட்பு குழு சார்பில் பல்வேறு தொடர் போராட்டங்கள் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டன. ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கடந்த 19.3.2018 மற்றும் 26.4.2018 கடைக்காரர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனிடையே பூவனநாத சுவாமி திருக்கோயில் தேவஸ்தான பயன்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மழைக்காலங்களில் மழைநீர் ஓடையில் செல்ல போதிய வழிகள் இல்லாததால் பிரதான சாலையில் தேங்கி பொதுமக்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படுவது தொடர்வதால் ஆக்கிரமிப்பாளர்கள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே முன்வந்து அகற்றி கொள்ள கடந்த 17.8.2019ல் டி.ஆர்.ஓ. வீரப்பன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக நீதிமன்ற தடை உத்தரவில் குறிப்பிட்டுள்ள கடைகளை தவிர்த்து, இதர தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்து ஓடையின் மீது கட்டப்பட்டுள்ள கடைகளை 23.8.19-ம் தேதி மாலை 5 மணிக்குள் காலி செய்திட வேண்டுமென்றும், தவறும் பட்சத்தில் 24.8.19-ம் தேதி காலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என வட்டாட்சியர் பி.மணிகண்டன் நோட்டீஸ் வழங்கியிருந்தார்.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின்படி வருவாய்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, மின்வாரியம், காவல்துறை அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி சனிக்கிழமை அனைத்து துறை அதிகாரிகள், பணியாளர்கள் காலை 5.30 மணியளவில் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் போலீஸார் யாரும் வரவில்லை. இதுக் குறித்து வட்டாட்சியர் மணிகண்டன், டி.எஸ்.பி. ஜெபராஜை தொடர்பு கொண்டபோது காவலர்கள், தூத்துக்குடியில் நடைபெறும் 2-ம் நிலை காவலர் தேர்வு பணிக்காக சென்றுவிட்டனர் என தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிப்புகள் அகற்ற போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்த டி.எஸ்.பி. சனிக்கிழமை காலையில் போலீஸ் தேர்வு பணிக்கு அனைத்து காவலர்களும் சென்று விட்டனர் என கூறியதால், அதிர்ச்சியடைந்த வருவாய்த்துறையினர் உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அனுப்பி அடுத்த கட்ட உத்தரவுக்காக காத்திருந்தனர். இதனால் ஆக்கிரமிப்புகள் அன்றைய தினத்தில் அகற்ற முடியவில்லை.
தற்பொழுது திங்களன்று போதிய பாதுகாப்பினை போலீசார் நல்கிட, வருவாய்த்துறையினரும் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்றி வருகின்றனர். 60 ஆண்டுகளாக ஓடைக்கு நீர்வரத்து செல்லாததால் நீரை சேமிக்க இயலாத கோவில்பட்டி மக்கள் இச்சம்பவத்தால் பெருமகிழ்வடைந்து மாவட்ட நிர்வாகத்திற்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.