கடந்த 2018ம் ஆண்டு மே 22 ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போரட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். நேற்று சட்டப்பேரவையில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் பல முக்கிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக "ஸ்டெர்லைட் கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவறிவிட்டனர். ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. போராட்டக்காரர்களில் சிலர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு முன் எவ்வித எச்சரிக்கையும் விடப்படவில்லை. அப்போதைய காவல்துறைத் தலைவர் சைலேஷ்குமார் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள்ளேயே இருந்திருந்தும், அப்போதைய காவல்துறை துணைத் தலைவர் அவராகவே அதிகாரத்தைக் கையிலெடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உச்சபட்சமாக பொதுமக்கள் மீது சூப்பாக்கிச்சூடு நடத்திய காவலர் சுடலைக்கண்ணு பற்றியும் அதில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் "மக்கள் மீது வெறித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர் சுடலைக்கண்ணு, வேட்டையாடுவது போல் பொதுமக்களைச் சுட்டுத்தள்ளியுள்ளார். மனிதத் தன்மை சிறிதும் இன்றி தலையின் பின்புறம், இதயம், தலை எனத் துப்பாக்கிச்சூடு முழுவதும் உயிரை எடுப்பதிலேயே குறியாக இருந்துள்ளார். காலில் சுட வேண்டும் என்பதை அவர் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை" என்று கடுமையான வார்த்தைகளால் ஆணையம் பதிவு செய்துள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இல்லை என சுட்டிக்காட்டுள்ள விசாரணை ஆணையம், தூத்துக்குடியின் நிலவரங்களைப் பற்றி முழுமையாக தெரியாத வெளிமாநில அதிகாரிகளான ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், டிஐஜி கபில்குமார் சரத்கர், டிஎஸ்பி லிங்க திருமாறன் ஆகியோரின் உத்தரவின் பேரில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது என தெரிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்திற்குள்ளேயே ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சுடும் வீரரான சுடலை கண்ணுவை அழைத்துக்கொண்டு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், எஸ்.பி மகேந்திரனுடன் ஆர்வத்துடன் சென்று சுடலை கண்ணு செல்ஃப் லோடேட் ரைஃபில் மூலமாக 17 ரவுண்டுகள் சுட்டதாக தெரியவந்துள்ளது. அடுத்தநாள் எஸ்பி மகேந்திரன் தன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஒன்பது ரவுண்டுகள் சுட்டதாகவும் அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் சிலர் காயம் அடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஐஜி சைலேஷ் யாதவ், டிஐஜி கபில்குமார் சரத்கர், எஸ்பி மகேந்திரன், டிஎஸ்பி லிங்க திருமாறன், காவல் ஆய்வாளர்கள் திருமலை, ஹரிகரன், பார்த்திபன், எஸ்ஐக்கள் சொர்ணமணி, ரென்னீஸ், காவலர்கள் ராஜா சங்கர், சுடலை கண்ணு, தாண்டவ மூர்த்தி, சதீஷ்குமார், ராஜா, கண்ணன், மதிவாணன் என பல பேர் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல் ஏழு பேரை சுட்டு கொலை செய்த சுடலைக்கண்ணு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.