சரக்கு வாகனத்தை ஏற்றிக் கொல்லப்பட்ட எஸ்.ஐ.பாலு குடும்பத்துக்கு ரூபாய் 50 லட்சம் வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிப்புரிந்து வந்த பாலு, நேற்றிரவு (31/01/2021) காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது, ஏரல் கடை வீதியில் உள்ள ஒரு உணவகத்தில் மதுபோதையில் ஒருவர் தகராறு செய்வதாகக் கடையின் உரிமையாளர் தொலைப்பேசி வாயிலாகத் தகவல் தந்ததையடுத்து, உதவி ஆய்வாளர் பாலு மற்றும் காவலர் பொன்சுப்பையாவுடன் அக்கடைக்குச் சென்று தகராறில் ஈடுபட்ட கொற்கை கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் என்பவரை எச்சரித்து அனுப்பி வைத்து விட்டு, இருவரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இருவரும் இன்று (01/02/2021) இரு சக்கர வாகனத்தில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஆத்திரமடைந்த முருகவேல் என்பவர், சரக்கு வேனை ஒட்டிச் சென்று, இரு சக்கர வாகனத்தின் பின் பகுதியில் மோதியதில், உதவி ஆய்வாளர் பாலு கீழே விழுந்து பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலுவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பணியில் ஈடுபட்டிருக்கும் போது உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் பாலுவின் குடும்பத்திற்கு சிறப்பினமாக, ரூபாய் 50 லட்சமும், காயமடைந்த காவலர் பொன்சுப்பையாவுக்கு ரூபாய் 2 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் பாலுவின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இச்சம்பத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனைப் பெற்றுக் கொடுக்க காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்." இவ்வாறு முதல்வர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.