அபாயகரமான கழிவு குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லாததால் இது நிச்சயமாக சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதே உண்மை. கழிவு மேலாண்மைக்கு போதிய வசதிகளை ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற்படுத்தவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை முறையாக கண்காணிக்க தவறியது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தவறே. ஆலையைப் பராமரிக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஸ்டெர்லைட்டின் கதை நம்பும்படியாக இல்லை.
ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல், தொண்டை பாதிப்பு உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி 80,725 பேரிடம் நடத்திய ஆய்வில், மற்ற பகுதியில் வசிப்பவர்களை விட 1000 மடங்கு மூளை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் பகுதியைச் சுற்றியுள்ள மக்களின் உடல்நலத்தை ஆலை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டால், இந்தியாவின் தாமிரத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது, பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஆலை நிர்வாகத்தின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிகளவில் இயற்கையை மாசுபடுத்தும் தொழிற்சாலையினால் கிடைக்கும் பொருளாதார நிலையை விட சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே முக்கியம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, மக்களை சமாதானப்படுத்தும் நோக்கிலேயே ஆலை மூடப்பட்டது என்ற வாதத்தை ஏற்க முடியாது.
ஒரு நாளைக்கு 1200 டன் தாமிரம் உற்பத்தி செய்யும் நிலையில், அதன்மூலம் 2400 டன் கழிவு வெளியேற்றப்படுகிறது, இதன் மூலம், ஆண்டுக்கு 8 லட்சம் டன் கழிவு வெளியேற்றப்படுகிறது. இது அதிர்ச்சிகரமானதாக உள்ளது. ஸ்டெர்லைட் தரப்பின் வாதங்கள் காகிதத்தில் பார்க்க வேண்டுமானால் நன்றாக இருக்கும். இதுபோன்ற அபாயகரமான தொழிற்சாலையை நிறுவ ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு அடிப்படை உரிமையே இல்லை.
அரசியல் காரணங்களுக்காக ஆலை மூடப்பட்டது எனக் கருத்தில் கொள்ள வேண்டுமானால், இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆலை நிறுவப்பட்டதும் அரசியல் காரணங்களுக்காகத்தான் என எண்ணத் தோன்றுகிறது.. அனுமதி அளிக்கப்பட்டபோது விதிக்கப்பட்ட நிபந்தனை மீறலின் தாக்கம், சிறிது காலம் கழித்தே தெரிய வரும். உள்நோக்கம் மற்றும் அரசியல் காரணங்களுக்காக ஆலை மூடப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை. தூத்துக்குடியில் மிகக்பெரிய நிறுவனமான ஸ்டெர்லைட் நிறுவனம், தங்களை மட்டுமே பழிவாங்குவதாக கூறுவது ஏற்றுக்கொள்ள தக்கதல்ல.
ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு சரியே. பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட இரண்டு மாநிலங்களில் மக்களின் எதிர்ப்பு காரணமாக ஆலையை அமைக்க வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆலையை மூடிய மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை எதிர்த்தும் அரசாணையை எதிர்த்தும் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.