தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் அருகிலுள்ள கீழப் பனைகுளத்தைச் சேர்ந்தவர் யோவான் அற்புதராஜ். இவர் கூலித் தொழிலாளி. எண்ணியதை சாதிப்பதற்காக எந்த எல்லை வரையிலும் போகக்கூடிய நபர் என்கிறார்கள் அவரைப் பற்றி அறிந்தவர்கள்.
யோவான் அற்புராஜ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11- ஆம் தேதி அன்று, அதே ஊரைச் சேர்ந்த டூவீலர் மெக்கானிக் ஜெயராஜின் மனைவி அஜிதாவிடம் தகாத முறையில் நடக்க முயன்றிருக்கிறார். அதனை அஜிதா தட்டிக்கேட்க முயன்றபோது அவரிடம் தகராறு செய்த அற்புதராஜ், அவரைத் திடீரென்று கழுத்தில் வெட்டியிருக்கிறார். அந்தத் தாக்குதலால் அஜிதாவின் கை ஒன்று செயலிழந்திருக்கிறது. இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து, யோவான் அற்புதராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அற்புதராஜ், தன் சொந்த ஊருக்கு வந்தார். ஊர் மக்கள் சிலரிடம் இந்த வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டியதாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட அஜிதா, அவரது கணவர் ஜெயராஜ், மாமனார் செல்லத்துரை ஆகியோரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியிருக்கிறார். இதனால் செல்லத்துரைக்கும், அற்புதராஜிற்கும் பகைமையானது. இதையடுத்து அந்த ஊரின் பெண்கள் சிலர், அற்புதராஜ் தங்களை மிரட்டுவதாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் (25.02.2021) அங்குள்ள காட்டுப் பகுதியில் யோவான் அற்புதராஜ் நின்றிருக்கிறார். அது சமயம் அங்கு வந்த செல்லத்துரைக்கும், அவருக்கும் வழக்கு தொடர்பாக வாக்குவாதமாகி தகராறு வரை போயிருக்கிறது. இதனால் ஆத்திரமான செல்லத்துரை, தான் வைத்திருந்த அரிவாளால் யோவான் அற்புதராஜை மாறி மாறி வெட்ட, அதில் தலை மற்றும் கை துண்டானது. சம்பவ இடத்திலேயே பலியானார் அற்புதராஜ். பின்பு துண்டான கையை மட்டும் எடுத்துக்கொண்டு போய் அவரது வீட்டு முன் வீசிவிட்டுத் தலைமறைவாகியிருக்கிறார் செல்லத்துரை.
தகவலறிந்த சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் மற்றும் போலீசார், அற்புதராஜின் உடலையும் தனியாகக் கிடந்த கையையும் கைப்பற்றி, சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். ஸ்பாட்டிற்கு வந்த மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர். தலைமறைவான செல்லத்துரையைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் உட்பட மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையும், தேடலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.