அண்மையில் பெய்த அதீத கனமழை தூத்துக்குடியையும் நெல்லையையும் புரட்டிப்போட்ட நிலையில், நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. நாளை மீண்டும் தூத்துக்குடியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை விடுக்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கை காரணமாக மக்களுக்கு பல்வேறு எச்சரிக்கை அறிவிப்புகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாதன பொருட்களை மக்கள் கவனமாக கையாள வேண்டும் எனவும், குறிப்பாக மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை உள்ள தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், ஆற்றில் இறங்கி குடிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.