மருத்துவப் படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரும் மேல்முறையீட்டு வழக்கில் மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில் இதுவரை எந்தக் கொள்கை முடிவும் எடுக்கவில்லை. எனவே 50 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமல்ல, அகில இந்திய அளவில் நடைமுறையில் உள்ள 27 சதவீத இட ஒதுக்கீடும் தர முடியாது எனக் கூறியுள்ளது. இதற்கு முழுப் பொறுப்பும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசுதான்.
பா.ஜ.க எப்பொழுதும் இரட்டை வேடம் போடுகிற கட்சி. மக்களிடம் ஒரு முகத்தையும், நிர்வாகத்தில் வேறு முகத்தையும் காட்டுகிற கட்சி. பெண்களை துன்புறுத்திய சண்முக சுப்பையா என்பவரை மதுரை எய்ம்ஸ் உறுப்பினராக நியமித்திருப்பது வெட்கக்கேடானது. அவர் மீது வழக்குகள் உள்ளதால் அவரது நியமன ஆணையை ரத்துசெய்ய வேண்டும்.
காவல்துறையினர், பா.ஜ.கவின் போராட்டத்துக்கு அனுமதி அளித்து, அவர்களை அநாகரிகமாகப் பேசவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்துக்களின் மனதைப் புண்படுத்தி விட்டார்கள் என்று எனக்கு எதிராக மட்டுமல்லாமல் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூர்யா, அவரது மனைவி ஜோதிகா ஆகியோருக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், யாருடைய உரிமைக்காகவும், இட ஒதுக்கீட்டுக்காகவும் பெண்களின் நலனுக்காகவும் எந்த ஒரு போராட்டத்தையும் அவர்கள் நடத்தவில்லை. பா.ஜ.கவினர் தமிழகத்தை வன்முறைக் காடாக மாற்ற முயற்சிக்கிறார்கள். மதவெறியாட்டம் நடத்துவதற்கான ஒரு களமாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். இதற்கு முழுப் பொறுப்பும் அ.தி.முக அரசுதான்” என்றார்.