பரபரப்புகளுக்கு நடுவே இன்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது "நாம் எதிர்க்க போவது இரண்டு ஜாம்பவான்களாக இருக்கும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை என்பதை மனதில் கொள்ளவேண்டும். தமிழகத்தில் சரியான ஆளுமை இல்லை. ஆள் பலம், பண பலம் இருந்தும் கலைஞரின் அரசியல் வாரிசு என்பதை நிரூபிக்கும் நிலையில் ஸ்டாலின் உள்ளார். இளைஞர்கள் மத்தியில் எழுச்சி அலை உருவாக வேண்டும். அவ்வாறு உருவானால் அசுர பலமுடைய கட்சிகள் உடையும். இந்த வயதில் என்னை நம்பி வர இருக்கிறீர்கள் முதலிலேயே எல்லாவற்றையும் சொல்லிவிடுவது நல்லது.
என்னை வருங்கால முதல்வர் என சொல்லுவதை முதலில் நிறுத்துங்கள். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டும். நான் முதல்வர் இல்லை ஆனால் அரசியல் புரட்சிவேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து உழைத்து அந்த எழுச்சி மக்களிடம் ஏற்பட்டால்தான் நான் அரசியலுக்கு வருவேன்" என தெரிவித்தார்.
ரஜினியின் இந்த நிலைபாடு குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், 'குட்டை நாறும் என மீன்கள் தரையில் வாழ்வதில்லை. எல்லாமும் சீரான பிறகு அரசியலுக்கு வருவேன் என ரஜினி சொல்வதில் நியாயமில்லை' என கருத்து தெரிவித்தார். பின்னர் தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து பேசிய அவர், 'பட்டியலினத்தவர் வாக்குவங்கியை குறி வைத்து முருகனுக்கு பாஜக பதவி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்' என்றார்.