திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக நலப் பாதுகாப்பு வட்டாட்சியராகப் பணி செய்துவருபவர் ரவிச்சந்திரன்.
இவர் ஏற்கனவே விருத்தாசலம் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும் வட்டாட்சியர் ஆகவும் வருவாய்த்துறையில் பணியாற்றியவர். தற்போது திட்டக்குடியில் சமூகநல வட்டாட்சியராகப் பணி செய்து வருகிறார். ஏழை எளிய மக்களிடம் அரசின் உதவிகளை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதிலும் அந்த உதவிகள் தகுதியுள்ள பயனாளிகளுக்குக் கிடைத்திட வழிவகை செய்து வருவதோடு பயனாளிகளிடம் அன்பாகவும் எளிமையாகவும் பேசி அவர்களின் தேவைகளை, குறைகளை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உடனுக்குடன் செய்துகொடுத்து வருகிறார். அதேபோன்று திட்டக்குடி வட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு சிக்கலான பிரச்சனைகளையும் சுமுகமான முறையில் ஏற்கனவே பலமுறை தீர்த்து வைத்தவர்.
அதிகாரி என்ற தோரணை இல்லாமல் மக்களிடம் எளிமையாகப் பழகுவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றுள்ளார். அப்படிப்பட்டவருக்கு நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நடைபெற்ற 72வது சுதந்திர தின விழாவில், சிறப்பாகப் பணி செய்தமைக்காக மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி விருது வழங்கிப் பாராட்டியுள்ளார். விருது பெற்ற சமூக நல வட்டாட்சியர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு திட்டக்குடி பகுதிவாழ் மக்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.