Skip to main content

கணவரின் மரணத்தை அறியாமலேயே உயிரிழந்த மனைவி; இறப்பிலும் இணை பிரியாத தம்பதியர்

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

thiruvarur muthupet husband and wife incident 

 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை திமிலத்தெருவைச் சேர்ந்தவர் சின்னக்கிளி என்கிற அப்துல் சலீம் (வயது 60). இவரது மனைவி மும்தாஜ் (வயது 59). திருமணம் ஆனதில் இருந்து ஒருவருக்கு ஒருவர் அன்பை செலுத்தி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மும்தாஜ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் அறுவை சிகிச்சை முடிந்து மகளின் வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

 

இதையடுத்து மனைவி மும்தாஜுக்கு மருந்து வாங்குவதற்காக அப்துல் சலீம் தனது இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் மதியம் பட்டுக்கோட்டைக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து அப்துல் சலீம் மயங்கி நிலை தடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தைக் கண்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அப்துல் சலீம் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அப்துல் சலீமின் உடலை அவரது வீட்டிற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர்.

 

இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டு உடல் நலம் தேறி வந்த மும்தாஜ்க்கு அதிர்ச்சி தரும் தகவல் ஏதும் சொல்லக் கூடாது என்பதால் கணவர் இறந்த செய்தியை அவரிடம் கூறாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென கணவர் இறந்து சுமார் 4 மணி நேரம் கழித்து நேற்றிரவு மும்தாஜும் உயிரிழந்தார். கணவர் இறந்த சிறிது நேரத்தில் மனைவியும் இறந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்