சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,நேற்று (23.12.2019) திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை நடந்தது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கே.எஸ்.அழகிரி, கி.வீரமணி, வைகோ எம்.பி, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் எம்.பி, காதர்மொய்தீன், ஜவாஹிருல்லா, ப.சிதம்பரம், வேல்முருகன், ஈஸ்வரன், கனிமொழி எம்.பி, தயாநிதிமாறன் எம்.பி, உதயநிதி ஸ்டாலின், ஐஜேகேவின் ஜெயசீலன் உள்ளிட்ட தலைவர்கள் பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்றவர்கள் குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி முழக்கத்தை எழுப்பினர். இந்த பேரணியில் சுமார் 60,000- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் காவல்துறை உத்தரவை மீறி குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் பேரணி சென்றதாகக் கூறி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 8 ஆயிரம் பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியர் உத்தரவை மதிக்காமல் இருத்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.