திருவாரூர் அருகே வெட்டாற்றில் நடந்த தூர்வாறும் பணியின்போது சேதப்படுத்தப்பட்ட ஆற்றின் கரைகளை சரிசெய்யாமல், தூர்வாரும் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், அபிவிருத்திஸ்வரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி வழியாக செல்லும் வெட்டாற்றில் தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின்போது ஒரு பக்கத்தின் கரைமுழுவதும் சேதமடைந்தது. அந்த கரையின் வழியாக கொரடாச்சேரியில் இருந்து குடவாசல் வரை பொது போக்குவரத்து சாலையும் செல்கிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கரையை சீர்செய்யாமல், தூர்வாரும் பணிகளை திடிரென அதிகாரிகள் நிறுத்திவிட்டனர். இதனை கண்டித்து தூர்வாரப்பட்ட வெட்டாறு, முக்கிய வடிகால் என்பதால் வரும் மழைக்காலங்களில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படும்போது உடைப்பு ஏற்பட்டு அபிவிருத்தீஸ்வரம், கமுககுடி, சிட்டிலிங்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படும். ஆகவே உடனடியாக ஆற்றின் கரையை பலப்படுத்தி சீரமைக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல்துறையினர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு நாட்களில் மீண்டும் பணிகள் தொடங்கி எல்லா பணிகளும் முடிக்கப்படும் என வாக்குறுதி அளித்த பிறகே போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.