திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் லலிதா ஜுவல்லரி நகைக் கடையியின் பின்புறம் குடைந்து, 13 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்தக் கொள்ளை சம்பவத்தால் நாடே அதிர்ந்தது. குற்றவாளியைப் பிடிக்க ஏழு தனிப்படைகள் போடப்பட்டும் பிடிக்க முடியவில்லை.
பின்னர் இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளி மணிகண்டன் என்பவனை பிடித்தனர். அவனிடம் இருந்த 4 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை காவல் துறையினர் கைப்பற்றினர். பின்னர் அவன் கொடுத்த தகவலின் பெயரில் முருகன் என்பவனைத் தேடினர்.
போலிசார் தேடுவதை அறிந்த முருகன், பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராகினான். பின்னர், சிறையில் அடைக்கப்பட்டான். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொள்ளை வழக்கில், முருகன் தான் மூளையாகச் செயல்பட்டான் என்பதை போலிசார் கண்டுபிடித்தனர். விசாரணையில், முருகன் கொடுத்த தகவலின்படி, திருச்சி காவிரிப் படுகையில் 4 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்டெடுக்கப்பட்டன.
இந்தக் கொள்ளை மட்டுமல்லாது சென்னையில் 12 மற்றும் கர்நாடகாவில் 46 வழக்குகளில் சிக்கிய பிரபல கொள்ளையன்தான் இந்த முருகன். உடல்நலக் குறைவுடன் இருந்த முருகனுக்கு கடந்த மே மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனாலும் அவன் மீதான பல வழக்குகள் நிலுவையில் இருந்ததால், அவனால் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனிடையே, அவனது உடல்நிலை மோசமாகவே அவன் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். 6 மாதமாக சிகிச்சை பெற்று வந்த முருகன், இன்று அதிகாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தான். இறுதிச் சடங்கு திருவாரூரில் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.