திருச்சி நகை கொள்ளையை தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறையினர் வாகன சோதனையை நடத்துகின்றனர்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தங்கமணி பில்டிங் அருகே காவல் ஆய்வாளர் இராஜேந்திரன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஷைலோ காரினை மறித்து சோதனையை துவங்குவதற்கு முன்னாடியே காரிலிருந்த ஒருவன் தப்பியோடினான். அவனை பிடித்து விசாரித்தபோது அந்த கார் டிரைவர் பாண்டியன் என தெரியவந்தது.
டிரைவர் பாண்டியனை பிடித்த போலீசார், அந்த காரை சோதனை செய்தனர். அதில் 11 மூட்டைகளில் 400 கிலோ எடை கொண்ட கஞ்சா பிடிபட்டது. டிரைவர் பாண்டியனை கைது செய்து விசாரனையை மேற்கொண்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், டிரைவர் பாண்டியன் சிவகங்கை மாவட்டம், லட்சுமிபுரத்தை சேர்ந்தவன் என்பதும் சிவகங்கையிலிருந்து வேளாங்கண்ணிக்கு கஞ்சாவை கடத்தி செல்வதாகவும் தெரியவருகிறது. தப்பியோடிய மற்றொருவரையும் போலிஸார் தேடி வருவதோடு கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்களை பற்றியும் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கடத்திய கஞ்சாவின் தமிழகத்தின் மதிப்பு சுமார் ரூபாய் 40 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. கடத்திய கஞ்சாவை இலங்கையில் விற்றால் அதன் மதிப்பு ரூபாய் ஒரு கோடியை தாண்டும் என மதிப்பிடபட்டுள்ளது. அதோடு இலங்கைக்கு வேதாரண்யம் கோடியக்கரை வழியாக கடத்த சென்றிருக்கலாம் என்கிறது காக்கிகள் வட்டாரம்.
கஞ்சா கடத்தி வந்த காரில் நூற்றுக்கும் அதிகமான நம்பர் பிளேட்டுகளும், அதிமுக கொடிகளும் இருந்துள்ளது.