ஆற்று மணலை கொள்ளையடித்த கும்பல் பின்னர் குளம், குட்டைகளை குறிவைத்து மணல் கடத்தல் நடத்தினர். இந்த நிலையில் தற்போது விளைநிலங்களையும் குறிவைத்து மணல் கடத்த தொடங்கியுள்ளனர். இதற்கு பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் ஒருசில அதிகாரிகள், காவல்துறையினரின் ஆதரவோடு மணல் கொள்ளை ஜரூராக நடந்தபடி தான் இருக்கிறது.
அந்த வகையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கிராமத்தில் தனிநபர் ஒருவர் குருவை சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலத்தில் 30 அடி ஆழத்திற்கு மேல் மணல் எடுத்து ஆந்திரா வரை கடத்திவருகிறார். தொடர்ந்து இப்பகுதியில் தனிநபர்கள் சட்டத்திற்குப் புறம்பாக அதிக அளவில் விவசாய நிலங்களையே குறிவைத்து மணல் எடுப்பதாக காவல்துறை, வருவாய்த்துறையிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை என கோபமடைந்து விவசாயிகளும், அப்பகுதி கிராம மக்களும் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்து வைத்த மயிலாடுதுறை காவல்துறையும், வருவாய் துறையும் " இனி மணல் கொள்ளை நடக்காது". என கூறி போராட்டத்தை கைவிட வைத்தனர்.
ஆனாலும் பொதுமக்களுக்கு சவால் விடும் வகையில் மீண்டும் அதே இடத்தில் 2 இயந்திரங்களை கொண்டு சுமார் நூறு லாரிகளில் மண் அள்ளப்பட்டது. மேலும் ஆறு இயந்திரகளை கொண்டு வந்து இருநூறுக்கும் அதிகமான லாரிகளில் மணல் கொள்ளையை நடத்தினர், இதைக்கண்டு கோபத்தின் உச்சத்திற்கே சென்ற, விவசாயிகளும், பொதுமக்களும் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்குவந்த மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையிலான போலீசார்," இனி மணல் கொள்ளை நடக்காது, விவசாய நிலங்களின் மணல் எடுப்பது உடனடியாக தடுத்து நிறுத்தப்படும், எடுத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என உத்தரவாதம் கொடுத்த பிறகு மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இது குறித்து பொதுமக்களிடம் விசாரித்த போது, " எங்க ஊர் விவசாயம் மட்டுமே பிரதான தொழில், நிலத்தடி நீரை கொண்டு முப்போகமும் சாகுபடி செய்து வருகிறோம். இதற்கு ஆபத்தை உருவாக்கும் விதமாக மணல் கொள்ளையர்கள் மணலை மட்டும் குறிவைத்து கடத்துகின்றனர். ஆத்தூர், கேசிங்கன்,பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மயிலாடுதுறை அதிமுக எம்,எல்,ஏ ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான சுரேஷ் என்பவரே மணல் கொள்ளையை நிகழ்த்தி வருகிறார். குடியிருப்பு பகுதிகள் வழியாகவே மணல் கடத்துவதால் இரவு நேரங்களில் தூங்கவே முடியவில்லை. மிகமுக்கியமாக நிலத்தடி நீர் படுபாதாளத்திற்கு செல்கிறது. பகல் முழுவதும் மணலை குவித்து, இரவு நேரங்களில் லாரிகள் மூலம் கடத்துகின்றனர். இது மணல்மேடு காவல்துறையினருக்கு தெரிந்தும் கட்டுக்கட்டாக பணத்தை வாங்கிக் கொண்டு எங்கள் வாழ்வில் மண்ணை போடுகின்றனர்." என்கிறார்கள் வேதனையுடன்.