திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி ராமர் மடத்தை சேர்ந்தவர் கல்விபிரியன். மீன் வியாபாரியான இவர், பாமக நகர செயலாளராகவும் இருந்து வருகிறார். சம்பவத்தன்று கல்விபிரியன் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே மீன் வியாபாரம் செய்து வந்தார்.
இந்தநிலையில் மீன் வியாபாரிகள் மார்க்கெட் பகுதிகளில் மட்டுமே வியாபாரம் செய்ய நகராட்சி உத்தரவிட்டது. இதற்கு சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம்தான் காரணம் என்று கூறி, அவரை அரிவாளால் வெட்டிவிட்டு கல்விபிரியன் தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த வெங்கடாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதுகுறித்து புகார் அளித்தும் கல்விபிரியனை போலீசார் கைது செய்யவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், களப்பணியாளர்கள், கரோனா தடுப்பு பணியாளர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு துவங்கியது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி. துறையின் அதிரடி உத்தரவால் கல்விபிரியன் கைது செய்யப்பட்டார்.