
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 2,700-க்கும் அதிகமான சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இன்று அதிகாலையிலேயே பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது. இதற்கான பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய அண்ணாமலையார் தீபத்திருவிழா 9 நாட்களாக காலை, மாலை இருவேளை என சாமி வீதி உலாக்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை நான்கு மணி அளவில் திருக்கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை திருக்கோயில் பின்புறம் பக்கம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனைக் காண்பதற்காக சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருவார்கள் எனக் காவல்துறையால் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த காவல்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தீபம் ஏற்றப்படும் மலைப்பகுதியில் ஏறுவதற்கு பக்தர்கள் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பதால் அதற்காக மக்கள் வரிசையில் நிற்கத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டுள்ளது. மலை ஏறுவதற்கு அனுமதி சீட்டு பெற ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அட்டை இதில் ஏதாவது ஒன்றை வைத்து புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. முதலில் வரும் 2500 பேருக்கு மட்டுமே மலையில் ஏற அனுமதி வழங்கப்படுகிறது.