திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை (11.12.2019) உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மகா தீபத்திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலை உச்சியில் சரியாக மாலை 06.00 மணியளவில் தீபம் ஏற்றப்பட்டது. 200 கிலோ எடை, 5 அடி உயர கொப்பரையில் 3,500 கிலோ ஆவின் நெய் ஊற்றப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது. கோயிலில் கூடியுள்ள பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர். கிரிவலப்பாதையில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை நோக்கி மகா தீபத்தை வணங்கி வருகின்றனர்.
அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் தமிழகம், பிற மாநிலங்கள், வெளிநாட்டினர் உட்பட 25 லட்சம் பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் மலையில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை காண நாளையும் அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.