திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள ஜம்னாமத்தூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்தவர் ரவி. 52 வயதான ரவியை கரோனா பரவல் தொடங்கியது முதல் வேலூர் – திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடி கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். பணியில் இருந்து ஜூலை 9ஆம் தேதி காலை ஜம்னாமத்தூரில் உள்ள தனது குடியிருப்புக்கு வந்துள்ளார். அப்படி வந்தவர் சக போலீஸ் நண்பர்களிடம் செல்ஃபோனில் பேசியுள்ளார்.
ஜூலை 10ஆம் தேதி காலை காவல்நிலைய பணிக்கு நீண்ட நேரமாகியும் வரவில்லையென செல்ஃபோனில் தொடர்பு கொண்டுள்ளார்கள், ஃபோனை எடுக்கவில்லையாம். இதனால் நேரடியாகச் சென்று அறை கதவைத் தட்டியபோது கதவு திறக்கப்படவில்லையாம். பின்னர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, சீலிங் ஃபேனில் தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டு இருந்துள்ளார்.
இதுபற்றி உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தந்துவிட்டு உடனடியாக உடலை கீழே இறக்கி உடற்கூராய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்நிலையில் 10ஆம் தேதி மாலை உடலை வாங்கமாட்டோம் என ரவியின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இதுப்பற்றி நாம் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர். உயர் அதிகாரியாக இருந்தாலும், ஏன், எதுக்கு என கேள்வி எழுப்புவார். ஆரணியில் அவர் பணியாற்றியபோது, ஒரு பெண் காவலர் விவகாரத்தில் பெயர் அடிப்பட்டு பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டவர். அவருக்கும் போளுர் டி.எஸ்.பி குணசேகரனுக்கும் சண்டை. வேலை செய்யவில்லை எனச் சொல்லி டார்ச்சர் செய்கிறார் என சக காவல்துறை நண்பர்களிடம் புலம்பியுள்ளார். டி.எஸ்.பி குணசேகரன், ரவியை போளுர் கேம்ப் ஆஃபிஸ் வந்து சந்திக்க சொன்னார். அப்போது இருவருக்கும் செல்ஃபோனில் பேசும்போது, சண்டை வந்துள்ளது. அந்த விரக்தியில் தான் தற்கொலை செய்துக்கொண்டார். தற்கொலை செய்துக்கொள்ளும் முன் கடிதம் எழுதிவைத்துள்ளார். அந்தக் கடிதத்தை மறைத்துவிட்டார்கள். அதேபோல் டி.எஸ்.பி குணசேகரனிடம் பேசிய செல்ஃபோன் ஆடியோ கால் டெலிட் செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள்.