இரண்டாம் நிலைக்காவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பணிநாடுநர்களுக்கு உதவுவதற்காக, மாவட்ட எஸ்.பி. அலுவலகங்களில் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழக காவல்துறையில் 3,552 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இவற்றில், 2,890 ஆண் காவலர்கள் மற்றும் 662 பெண் காவலர்கள் பணியிடங்கள் அடங்கும். இப்பணியில் சேர, ஆகஸ்ட் 15- ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு உதவிடும் வகையில், ஒவ்வொரு மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் உதவி மையங்களை காவல்துறை தொடங்கியுள்ளது.
சேலம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தரை தளத்தில், இந்த உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. தினமும் காலை 09.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை இந்த மையம் செயல்படும்.
விண்ணப்பங்களை இணைய வழியில் அனுப்புவது தொடர்பான சந்தேகங்களை உதவி மையத்தின் வாயிலாக கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நேரில் வர இயலாதவர்கள், 94459- 78599 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் விவரங்களைப் பெறலாம் என சேலம் மாவட்டக் காவல்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.