தமிழகத்தில் பெரும்பான்மையான மாவட்டங்களில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் பரவல் இன்னும் குறையவில்லை. கடந்த மே 1ஆம் தேதி முதல் உயரத் துவங்கிய கரோனா ஜீன் 6ஆம் தேதி 493 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் ஜீன் 6ஆம் தேதி வரையென திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 26,464 நபர்களிடம் கரோனா கண்டறியும் பி.சி.ஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டது. இதில் 26,167 நபர்களின் முடிவுகள் வந்துவிட்டது. அதில் 493 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது குடும்பத்தார் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
கரோனா சிகிச்சை பெறுபவர்கள் 352 பேர் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். 141 பேர் மட்டும்மே திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 30 பேர் மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் துறைகளைச் சேர்ந்தவர்கள். பரிசோதனை முடிவு வராதவர்கள் 297 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் இன்னும் 50 பேருக்கு மேல் கரோனா பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள் தரப்பில்.
அதனால் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இன்னும் சில தினங்களில் 500 நபர்களை திருவண்ணாமலை கடந்துவிடும் என்பது குறிப்பிடதக்கது. தற்போது வரை கரோனா பாதிப்பில் இருந்து 178 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர், 2 பேர் இறந்துள்ளனர். இன்னும் 313 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.