தமிழகத்தின் பிரமாண்ட விழாக்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழா, இன்று (17-ஆம் தேதி) துா்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. இது டிசம்பர் 3-ஆம் தேதி சண்டிகேஸ்வரா் உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது. வருகிற 20-ஆம் தேதி தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது. தீபத் திருவிழாவின் 10-ஆம் நாளான வருகிற 29-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
இந்த விழாக்களுக்கு தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் கரோனா பரவலை முன்னிட்டு தீபத்திருவிழா வழக்கம்போல் நடைபெறுவது தடை செய்யப்பட்டுள்ளது. தீபத் திருவிழாவை நடத்துவதில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, கோயில் வளாகத்துக்குள்ளேயே சிம்பிளாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சாமி வீதிவுலாக்கள், கோயிலுக்குள் 5ஆம் பிரகாரத்துக்குள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபத்திருவிழா, கிரிவலம், மலையேறுதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. நகரத்தில் அன்னதானம் எதுவும் செய்யக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. வெளியூர் பக்தர்கள் திருவண்ணாமலை நகரத்துக்குள் வராதபடி நகரத்தின் 9 சாலைகளும் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.
வருகிற 17-ஆம் தேதி முதல் டிசம்பர் 3-ஆம் தேதி வரை தினமும் சுமார் 5 ஆயிரம் பக்தா்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் இணையதளத்தில் ஒரு நபருக்கு ஒரு நுழைவுச் சீட்டு என்ற முறையில் கட்டணமில்லாமல் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த முன்பதிவுச் சீட்டு மற்றும் உரிய அடையாள அட்டையுடன் வரும் பக்தா்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். அண்ணாமலையாரை தரிசனம் செய்ய விரும்புவோர் www.arunachaleswarartemple.tnhrce.in என்கிற இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபத்திருவிழா நிகழ்வுகள் தொலைக்காட்சி, யூடியூப் சேனல்கள், கோயில் இணையதளம், அரசு கேபிள் தொலைக்காட்சி, உள்ளூா் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இதனால், வீடுகளில் இருந்தே தீபத் திருவிழாவை பக்தர்கள் தரிசிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.