தமிழர் கடவுள் முருகனை கொச்சைப்படுத்தியதைக் கண்டித்தும், திமுகவின் மதவிரோதத்தை மக்களிடம் அம்பலப்படுத்தவும் இந்த வேல்யாத்திரையை நடத்துவதாக தொடக்கத்தில் அறிவித்தார் பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன். கடவுள் முருகன் பெயரில் அறுபடை வீடுகளுக்கும் பயணமாகும் இந்த வேல் யாத்திரையில், பச்சை வேட்டி, காவி சட்டை, கையில் வேல், கழுத்தில் பச்சைத் துண்டுடன் பூமாலை என வலம் வருகிறார் முருகன். அசப்பில் பாதயாத்திரை செல்லும் முருகன் பக்தர்கள் போலவே நடந்துகொள்கிறார்.
அதைப் பார்த்து பக்தியுடன் தான் இந்த வேல் யாத்திரை நடக்கிறது என பலரும் நம்பினர். ஆனால், திருவண்ணாமலையில் நடைபெற்ற வேல் யாத்திரை தொடக்க விழாவை பார்த்தவர்கள், இது பக்தி யாத்திரை அல்ல, அரசியல் யாத்திரை என்கிற பேச்சை தொடங்கியுள்ளனர்.
நவம்பர் 17ஆம் தேதி மாலை 4 மணிக்கு, திருவண்ணாமலை நகரில் இருந்து பாஜகவின் வேல் யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக கூட்டத்தை திரட்ட பல வழிகளைக் கையாண்டனர் பா.ஜ.க நிர்வாகிகள். பணம் தந்து ஆட்களை அழைத்து வந்தது ஒருப்பக்கமென்றால், மேடைக்கருகே பொதுமக்களின் கூட்டத்தை ஈர்க்க என்ன செய்யலாம் என யோசித்தனர். சினிமாவில் பாடல்களுக்கு நடனமாடும் டான்ஸர்களை அழைத்து வந்து சாலையில் ஆடவைக்கலாம் என முடிவு செய்தனர். சென்னையில் இருந்து சினிமாவில் பாடல்களுக்கு நடனமாடும் இளம் பெண் டான்ஸர்களையும், ஆண் டான்ஸர்களையும் அழைத்து வந்து, வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு அருகில் சாலையில் ஆடவைத்தனர். அவர்களும் கேரளா சென்டை மேளத்தின் அடிகளுக்கு ஏற்ப நடனம் ஆடினர்.
முருகன் பெயரில் யாத்திரையை நடத்திக்கொண்டு, குத்துப்பாட்டுக்கு சினிமா டான்ஸர்களான இளம்பெண்களை நடனமாட வைத்தது உண்மையான முருக பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது. முருக பக்தர் போல் பா.ஜ.க தலைவர் முருகன் நடந்துகொள்வதும் நாடகம் தானா என்கிற கேள்வி ஆன்மிகவாதிகளிடம் எழுந்துள்ளது.
பாஜகவின் வேல் யாத்திரை, பக்தியுடன் நடைபெறும் வேல் யாத்திரை என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குத்துப் பாட்டு யாத்திரையாக நடந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள் பக்தர்களும் பொதுமக்களும்.
படங்கள்: விவேகானந்தன்