திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தென்னிந்தியாவில் புகழ்பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான வெளியூர், வெளிமாநில பக்தர்கள் வருகிறார்கள். ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதம் வரை கேரளா போகும் அய்யப்பன் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதேபோல் தென்தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களும், கர்நாடகா, ஆந்திராவில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வரும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் ஒவ்வொரு நாளும் அண்ணாமலையார் கோயில் பக்தர்களால் நிரம்பிவழிகிறது, விடுமுறை தினங்கள் என்றால் இன்னும் கூட்டம் அதிகரிக்கிறது.
இவர்கள் வாடகை கார்கள், வேன்கள், பேருந்துகளில் தான் வருகின்றனர். இதில் பேருந்துகளை நிறுத்த சில இடங்களில் ஏற்பாடு செய்துள்ளது நகர போக்குவரத்து காவல்துறை. கார்களையும் அங்கேயே நிறுத்தச்சொல்கிறது. ஆனால் பலரும் நிறுத்துவதில்லை.
அந்த வாகனங்கள் அனைத்தும் கோயிலை சுற்றியே நிறுத்தப்படுகின்றன. கோயிலை சுற்றி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் என்ற ஒன்றை வசூலிக்கிறது கோயில் நிர்வாகம். அதை டென்டர் விட்டுள்ளது. காருக்கு 100, வேனுக்கு 150, பேருந்துக்கு 200 ரூபாய் என வசூலிக்கின்றனர். அப்படி வசூல் வேட்டையில் இறங்குபவர்கள் அந்த வாகனங்களை ஒழுங்காக நிறுத்த சொல்வதில்லை. இதனால் அவர்கள் விருப்பத்துக்கு வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றுவிடுகின்றனர்.
ஒரு வாகனம் பார்க்கிங் செய்யப்பட்டால் அதை எடுப்பதற்கு குறைந்தது 5 மணி நேரமாவது ஆகிவிடுகிறது. இவர்கள் விருப்பத்துக்கு வாகனங்களை நிறுத்திவிடுவதால் பின்னால் வரும் வாகனங்களும் சாலையின் மையத்திலேயே நிறுத்துகின்றனர். இப்படி அடுத்தடுத்து நிறுத்துவதால் பேருந்து நிலையத்துக்கும், பஜார்வீதிக்கும் செல்லப்படும் சாலைகளும் போக்குவரத்து நெரிசலால் தினம், தினம் சிக்கி தவிக்கின்றனர் வாகன ஓட்டிகள். அதேபோல் முன்னால் வந்தவர்கள் வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியேறுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதனை ஒழுங்குப்படுத்த வேண்டிய போக்குவரத்து காவலர்களும், ஒப்பந்தம் எடுத்தவர்கள் யாரும் அதனை கண்டுகொள்வதில்லை.
இதனால் வெளியூர் பக்தர்களோடு சேர்ந்து, உள்ளுர் பக்தர்களும் சிக்கி தவிப்பவர்கள், இதை சரிச்செய்ய அதிகாரிகள் முன்வருவார்களா என எதிர்பார்க்கின்றனர்.