Skip to main content

தீபத்திருவிழா – குற்றவாளிகளை கண்காணிக்க ஃபேஸ் ட்ராக்கர்

Published on 22/11/2018 | Edited on 22/11/2018
fg


திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 14ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்துவருகிறது. நாளை நவம்பர் 23ந்தேதி மதியம் 6 மணிக்கு 2660 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி வனிதா, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி.சக்கரவர்த்தி இருவரும் செய்தியாளர்களை சந்தித்தார்.


அவர்கள், சட்டம் – ஓழுங்கு பிரிவு காவல்துறை கூடுதல் தலைவர் தலைமையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோம். வடக்கு மண்டல ஐ.ஜி. கந்தசாமி தலைமையில் 5 டிஐஜிக்கள், 12 எஸ்.பிக்கள் என 8 ஆயிரம் போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார்கள். பரணி தீபத்துக்கு 8 ஆயிரம் பக்தர்களும், மகா தீபத்துக்கு 10 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள். கோயிலுக்குள் பக்தர்கள், போலிஸார் கைபேசி என்கிற செல்போன் கொண்டு வர அனுமதியில்லை.  


திருவண்ணாமலை நகரம், கிரிவலப்பாதை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக 3 நாட்கள் பதிவு செய்யும் வகையில் இதன் தன்மையுள்ளது. அதோடு பேஸ் ட்ராக்கர் என்கிற ஆப் பயன்படுத்தப்படுகிறது. இதில் 1.5 லட்சம் பழைய, புதிய, தலைமறைவு என அனைத்து தரப்பு குற்றவாளிகளின் புகைப்படங்களும் இந்த ஆப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கண்காணிப்பு கேமராவுக்குள் சிக்காமல் செல்ல முடியாது. அவர்கள் முகம் கேமராவில் சிக்கியதும் அவர்கள் பற்றிய தகவல் உடனடியாக எங்களது கட்டுப்பாட்டு அறையில் தனியாக தெரியும். இதன் மூலமாக குற்றவாளிகள் தப்பிக்காமல் தடுக்க முடியும்.


பெண்கள் மீதான வன்முறையை தடுக்க, குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க, கண்டுபிடித்து தர புதிய வாட்ஸ்அப் எண் தரப்பட்டுள்ளது. காணாமல் போன குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா, எங்குள்ளது என இணையம் வழியாகவே அறிந்துகொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள், பொதுமக்கள் வாட்ஸ்அப் வழியாகவே புகார் செய்யலாம் என்றார்.


இன்று நவம்பர் 22ந்தேதி மதியம் 1 மணி முதல் கார்த்திகை மாத பௌர்ணமி என்பதால் மாலை முதலே பக்தர்கள் கூட்டம் திருவண்ணாமலையில் குவிந்து வருகிறது. நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் அங்கங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதும் நடந்துவருகிறது. நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் காவல்துறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக காவல்துறை செய்த கெடுபிடிகள் இந்த ஆண்டு இதுவரை நகரத்தில் இல்லை என்பதால் உள்ளுர் பொதுமக்கள் நிம்மதியாக உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
 

 

சார்ந்த செய்திகள்