சேலத்தில், வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் திடீரென்று கீழே விழுந்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மெய்யனூர் ராம் நகரைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி (36). இவர் சிவதாபுரத்தில் உள்ள பி.வி. மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கமலா. இவரும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
ஆசைத்தம்பி கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மூலப்பிள்ளையார் கோயில் பகுதியில் இருந்து ராம் நகரில் வசித்து வந்த மாமனார் ராமச்சந்திரன் வீட்டில் குடியேறினார்.
இதனால் அங்கு வசித்து வந்த ராமச்சந்திரன், மெய்யனூர் அர்த்தநாரி கவுண்டர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் புதன்கிழமையன்று (டிச. 12) பால் காய்ச்சி குடியேறினார். ராம் நகர் வீட்டில் இருந்த பொருள்களை புதிய வீட்டுக்கு மாற்றும் பணிகள் நடந்து வந்ததால், புதன் கிழமை இரவு ராமச்சந்திரனும், அவருடைய மனைவியும் பழைய வீட்டிலேயே படுத்துக் கொண்டனர். ஆசைத்தம்பி மொட்டை மாடியில் தூங்கச் சென்றார்.
இந்நிலையில், வியாழக்கிழமை (2018, டிசம்பர் 13) அதிகாலை 4.30 மணியளவில், மொட்டை மாடியில் இருந்து ஆசைத்தம்பி திடீரென்று கீழே வி-ழுந்து கிடந்தார். அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் அவர் சாலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில், ஆசைத்தம்பி மது குடித்திருப்பதும், வாந்தி ஏற்பட்டுள்ளது. அப்போது நிலை தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஆசைத்தம்பி இறந்ததால் அவர் பணியாற்றி வந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து அவருடைய உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.