ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் தை இரண்டாம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தை இரண்டாம் தேதி திருவள்ளுவர் பிறந்த தினம் இல்லை என அறிவிக்கக் கோரி 'திருவள்ளுவர் திருநாள் கழகம்' என்ற அமைப்பின் தலைவர் சுவாமி தியாகராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என அறிவிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. 1935 ஆம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட மறைமலை அடிகள் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்ததாக குறிப்பிட்டார். மேலும் 400 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூரில் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோவில் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திர தினத்தில்தான் கட்டப்பட்டது என மனுதாரர் தெரிவித்தார்.
அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தை மாதம் இரண்டாம் தேதி திருவள்ளுவரைப் போற்றும் வகையில் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறதே தவிர, திருவள்ளுவர் பிறந்தநாளாக தமிழக அரசு அந்த நாளை அறிவிக்கவில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்யும் படி கோரிக்கை விடுத்தார். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தை இரண்டாம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் அதே நேரத்தில் அந்த தினத்தை திருவள்ளுவர் பிறந்த தினமாக அரசு எங்கேயும் அறிவிக்கவில்லை. அதேபோல் மனுதாரர் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திர நாளில் தான் திருவள்ளுவர் பிறந்தார் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்ததால் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திர நாளை திருவள்ளுவர் பிறந்த தினமாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.
Published on 18/09/2024 | Edited on 18/09/2024