திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் தனியார் பள்ளி தாளாளரின் மகன் பள்ளியில் உள்ள மாணவிகளுக்கும், பள்ளி ஆசிரியை பலருக்கும் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்த நிலையில் புகாரளிக்கப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருநின்றவூர் லட்சுமிபுரம் பகுதியில் உள்ளது ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தாளாளர் ஜெயராமன் என்பவரின் மகன் வினோத் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவிகளிடம் கவுன்சிலிங் என்ற பெயரில் தனியாக அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளிடமும் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து இன்று காலை 9 மணியிலிருந்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். அதேபோல் மாணவர்களும் வினோத்தை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் மாணவர்கள் சென்னை-திருப்பதி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அதனைத் தொடர்ந்து விஷயம் பூதாகரமான நிலையில் திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் ராமன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் பள்ளி தாளாளர் மகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பட்டாபிராம் காவல்நிலைய உதவி ஆணையர் சதாசிவம் தகவல் தெரிவித்துள்ளார். இருப்பினும் சிஎஸ்ஆர் எனப்படும் பதிவைக் காட்டும் வரை பள்ளி வளாகத்தை விட்டுச் செல்லமாட்டோம் என பள்ளி வளாகத்திற்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.