திருவள்ளூரில் பள்ளிக்கூடம் ஒன்றில் பூட்டில் மனித கழிவுகள் பூசப்பட்ட சம்பவம் தொடர்பாக பள்ளி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள மத்தூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 18 ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு வந்து வகுப்பறையின் கதவுகளை திறக்க முயன்ற பொழுது வகுப்பறையின் பூட்டில் மனிதக் கழிவு பூசப்பட்டிருந்தது. உடனடியாக இது குறித்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். அங்கிருந்த பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளிக்கு முன்பாக அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசாரும் இந்த கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் பள்ளி பூட்டுகளில் மனித கழிவை பூசியது அதே பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவன் என்ற அதிர்ச்சி தகவல் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தற்பொழுது அந்த மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.