இந்திய பிரதமர் மோடி மக்களிடம் பேசிய வீயோ ஒளிபரப்பு வெளிவந்தது. அதில் அவர், நாட்டு மக்கள் நடைபெற்று வரும் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து கடைபிடித்து வருவது வரவேற்கத்தக்கது என்றும் எல்லோரும் வீட்டிலேயே இருந்து இந்த கரோனா வைரஸை விரட்டுவோம் என்று அறிவுப்பு செய்ததோடு திடீரென்று மற்றொரு அறிவிப்பாக ஏப்ரல் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் தங்கள் வீடுகளில் உள்ள விளக்குகளை அனைத்துவிட்டு டார்ச் லைட் அகல் விளக்குகள் மூலம் ஒளி பாய்ச்ச கோரியிருந்தார்.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளரும் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான திருப்பூர் கே.சுப்பராயன் நம்மிடம் பேசும்போது, எதற்காக விளக்கேற்ற கூறியிருக்கிறார். இது எந்த அறிவியல் அடிப்படையில் கூறியிருக்கிறார். ஒரு மதசார்பற்ற நாட்டில் உயர் பொறுப்பான பிரதமர் பதவியில் இருக்கும் மோடி இதுபோன்ற அறிவிப்புகளை யாரிடம் ஆலோசனை பெற்று கூறி வருகிறார்.
அறிவியலுக்கு அப்பாற்பட்டு மனித குலத்தை கொண்டு செல்லும் பணியில் பிரதமராக இருந்து கொண்டு மோடி செய்யக்கூடாது. ஒளிமயமான இந்தியாவை உருவாக்குவதற்கு வீட்டில் ஒளி ஏற்றினால் மட்டும் போதாது. ஏழைகள் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டும். இன்று வீடே இல்லாமல் உணவு சமைக்க அடுப்பே இல்லாமல் வீதிகளில் வாழும் கோடான கோடி ஏழை மக்கள் நம் இந்திய சொந்தங்கள் வறுமையில் வாடி வருகிறது.
இந்த நிலையில் விளக்கு ஏற்றக் கூறுகிறார் மோடி. அன்று கைத்தட்ட சொன்னார். இன்று விளக்கக்கேற்ற கூறுகிறார். இதுவெல்லாம் என்ன விஞ்ஞான அடிப்படையில் கூறுகிறார். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் என்பது அறிவியல் ரீதியாக விஞ்ஞான ரீதியாக மக்களின் வாழ்க்கை தரத்தை அவர்களின் பாதுகாப்பை அவர்களின் சுகாதாரத்தை காக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் பிரதமர் மோடியோ எந்தவிதமான பொருளற்ற வகையிலும் பொறுப்பற்ற வகையிலும் இவரது அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. அதுதான் இப்போது விளக்கேற்ற சொன்னது.
இந்திய நாட்டில் 130 கோடி மக்களுக்கு பிரதமராக இருக்கும் ஒரு பொறுப்பான பதவியில் உள்ள ஒருவர் இப்படியெல்லாம் பேசுவது அந்த பதவிக்கே உகந்தது அல்ல என்றார்.