Skip to main content

’வெட்கத்தைவிட்டு சொல்லுகின்றேன் அவரது கையை பற்றிக்கொண்டு கேட்டோம்...’-மு.க.ஸ்டாலின் உருக்கமான பேச்சு

Published on 03/05/2019 | Edited on 04/05/2019

 

இன்று (03-05-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் , திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடக்கூடிய கழக வேட்பாளர் டாக்டர்.சரவணனை ஆதரித்து பல்வேறு இடங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அப்போது ஸ்டாலின் பேசியதாவது:

வருகின்ற 19ஆம் தேதி திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறப் போகின்றது அதற்கு நீங்கள் எல்லோரும் சிறப்பான வகையில் நம்முடைய தி.மு.கழகத்தின் அங்கீகாரம் பெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் டாக்டர்.சரவணன் அவர்களுக்கு நீங்கள் எல்லோரும் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து சிறப்பான வெற்றியைத் தேடித் தர வேண்டும். அதற்காகத்தான் உங்களை தேடி நாடி வந்திருக்கிறேன்.

 

s

 

ஏதோ தேர்தலுக்காக மட்டும் வந்து போகக் கூடியவர்கள் நாங்கள் அல்ல, அது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஏற்கனவே, கடந்த 18ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரம் பெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் மாணிக் தாகூர் அவர்களுக்கு சிறப்பான வகையில் வெற்றியை தேடித் தந்திருக்கின்றீர்கள். அதற்கான முடிவுகள் வருகின்ற 23ஆம் தேதி வரப்போகின்றது.

 

அந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவோடு சேர்ந்து நடைபெற இருக்கக்கூடிய திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவரும். அப்பொழுது நமது டாக்டர்.சரவணன் அவர்கள் வெற்றி பெற்றார் என்ற செய்தியும் வரும். எங்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையை விட தி.மு.க தான் ஆட்சிக்கு வரவேண்டும், மத்தியில் மோடியின் ஆட்சி ஒழிய வேண்டும், இங்கு இருக்கக்கூடிய எடப்பாடியின் ஆட்சி காலியாக வேண்டும், என்ற நினைப்போடும், உணர்வோடும் தான் நீங்கள் இருக்கின்றீர்கள்.

 

உங்கள் எல்லோரையும் நானே நேரடியாக சந்தித்து உங்களுடைய மகிழ்ச்சியை வரவேற்பை பார்க்கின்றேன். நீங்கள் அனைவரும் என்னுடைய கரங்களைப் பற்றிக்கொள்ளுகின்ற போது உங்களுடைய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி என்னை ஊக்கப்படுத்தி இருக்கின்றீர்கள்.

 

இங்கிருக்கும் ஒரு அம்மா, என்னுடைய கையை பிடித்துக் கொண்டு, நான் பரம்பரையாக இரட்டை இலைக்கு ஓட்டு போட்டவர். ஆனால் இந்த முறை இரட்டை இலைக்கு ஓட்டு போட மாட்டேன் உதயசூரியனுக்கு தான் ஓட்டு போடப் போகின்றேன் என்று சொன்னார். சொன்னார்களா, இல்லையா, நான் ஒன்றும் பொய் சொல்லவில்லை.

 

அதோ கை தூக்குகின்றார் பாருங்கள். நான் பொய் சொல்லவில்லை அது உண்மை. இது இங்கு மட்டுமல்ல, நேற்றைய தினம் நான் ஒட்டப்பிடாரம் தொகுதியில் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன். அப்பொழுது அங்கு ஒரு சகோதரி வருகின்ற வேகத்தைப் பார்க்கும் போது சண்டை போட வருவது போல் இருந்தது எனக்கு. ஆனால், என் கைகளைப் பற்றிக்கொண்டு 4 முறை இரட்டை இலைக்கு தான் நான் என்னுடைய ஓட்டை போட்டு உள்ளேன். ஆனால், இந்த முறை போட மாட்டேன். அம்மையார் ஜெயலலிதா அவர்களை தெய்வமாக நினைத்துக் கொண்டிருந்தேன் அவர்களையே கொன்றுவிட்டார்கள். இவற்றையெல்லாம் நீங்கள்தான் கண்டுபிடித்து தண்டனை கொடுப்பேன் என்று ஊர் ஊராக சென்று சொல்லிக் கொண்டு இருக்கின்றீர்கள். அந்த நம்பிக்கையில் உங்களுக்குத் தான் ஓட்டு போடப் போகின்றேன் என்று சொன்னார். அம்மையார் ஜெயலலிதா அவர்களின் இறப்பில் மர்மம் உள்ளது‌.

 

இந்த ஆட்சியில் பெண்களுக்கு மிகவும் மோசமான ஒரு சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது. முதலமைச்சராக இருந்து மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களும் ஒரு பெண் தான். ஒரு பெண்ணாக, முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் மர்மம் இருக்கின்றது.

 

அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று நான் சொல்லவில்லை, இன்றைக்கு துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பி.எஸ் அவர்கள் தான் முதன் முதலில் தன் பதவியை பறித்தவுடன் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் சமாதியில் அமர்ந்து கொண்டு 40 நிமிடம் தியானம் செய்து ஆவியோடு பேசினார். "அம்மா, என்னுடைய பதவியைப் பறித்துக் கொண்டார்கள். அநியாயம் நடக்கின்றது. அதுமட்டுமல்ல, உங்கள் இறப்பில் மர்மம் இருக்கின்றது சி.பி.ஐ விசாரணை தேவை" என்று முதன் முதலில் கேட்டது, ஓ.பி.எஸ் அவர்கள் தான். அதன் பிறகு தான் ஆறுமுகசாமி அவர்களின் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது.

 

அப்படி அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷனும் ஒரு நாடகம் தான். அந்த விசாரணை கமிஷனில் இருந்து ஓ.பி.எஸ் அவர்கள் ஆஜராக வேண்டும் என்று 6 முறை விசாரணைக்கு வரவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். ஆனால் இதுநாள் வரையில் ஒரு முறை கூட அவர் போகவில்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், ஜெயலலிதா என்ற ஒரு பெண் முதலமைச்சரின் மரணத்தில் மர்மம் இருக்கின்றது என்ற சந்தேகம் வந்துள்ளது.

 

s

 

அம்மையார் ஜெயலலிதா  முதலமைச்சராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவருக்கு ஓட்டு போட்டு அ.தி.மு.க கட்சிக்கு ஆதரவு தந்து அவர்களை ஆட்சியில் உட்கார வைத்தீர்கள். அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மறைந்து விட்டார்கள். அவர் மறைந்தது மர்மமான நிலையில் இருக்கின்றது என்று நாட்டிற்கு நன்றாகத் தெரியும்.

 

ஜெயலலிதா அவர்கள் 2 முறை சிறைக்குச் சென்ற பொழுது ஓ.பி.எஸ் அவர்களைத் தான் முதலமைச்சராக உட்கார வைத்து விட்டு சென்றார். அந்தளவிற்கு ஜெயலலிதா அவர்கள் மீது நம்பிக்கைக்கு உரியவர் ஓ.பி.எஸ் அவர்கள். அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்த பொழுது அவர் என்ன நிலையில் இருக்கிறார் எந்த முறையில் மருத்துவம் பார்க்கின்றார்கள், என்ன மருந்து கொடுக்கிறார்கள், என்ற செய்தி வெளியில் வரவில்லை. மர்மமாகவே இருந்தது, ஆனால் அம்மையார் ஜெயலலிதா அவர்களை சந்தித்து விட்டு வந்ததாக வெளியில் வருவார்கள். ஆனால், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இருந்த அறை பக்கமே சென்றிருக்க மாட்டார்கள். ஆனால், சில மந்திரிகள் பேட்டி கொடுப்பார்கள். அம்மா சாப்பிட்டார்கள், ஜூஸ் குடித்தார்கள்,காபி குடித்தார்கள், டிவி பார்த்தார்கள், ஒரு கோடி ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டார்கள் என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் பத்திரிக்கைகளில் வந்து பேட்டி கொடுப்பார்கள் அது உண்மை அல்ல. அவர் மர்மமான முறையில் இறந்து போயிருக்கிறார் இவற்றிற்கெல்லாம் ஒரு பின்னணி இருக்கிறது. அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

 

அதேபோல் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொள்ளை, கொலை விவகாரங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். அது யாருடைய பங்களா என்றால் அம்மையார் ஜெயலலிதா அவர்கள், சொகுசாக, உல்லாசமாக ஓய்வெடுக்கும் பங்களா.

 

அந்த பங்களாவில் அம்மையார் ஜெயலலிதா இறந்ததற்குப் பிறகு அங்கு இருக்கக்கூடிய பணங்களை, அங்கு இருக்கக்கூடிய ஆவணங்களை கொள்ளையடிக்க வேண்டுமென்று திட்டமிட்டு இந்த ஆட்சியாளர்கள் செய்த கொடுமையால் அங்கு வேலை பார்த்த வாட்ச்மேன் உட்பட 4 பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.  இவைகள் தற்போது வழக்கில் இருக்கின்றன.

 

அடுத்தது நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு பொள்ளாச்சியில் ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட இளம் பெண்களை கட்டாயப்படுத்தி, பலவந்தப்படுத்தி அவர்களை கடத்திக் கொண்டு சென்று, ஆளும் கட்சியைச் சார்ந்த இருக்கக்கூடிய துணை சபாநாயகரின் மகன்கள், அவர்களின் கூட்டாளிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, பண்ணை வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து, அதை புகைப்படம் எடுத்து, வீடியோவாக பதிவு செய்து அதை அந்த பெண்களுக்கே போட்டு காண்பித்து, மிரட்டி அச்சுறுத்தி பணம் பறித்து கொடுமை செய்திருக்கின்றார்கள்.

 

சமீபத்தில் ஐந்தாறு நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க எம்.எல்.‌ஏ தமிழ்ச்செல்வன், பெண்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி தன்னுடைய அலுவலகத்திற்கு வரவழைத்து, அங்கு ஆபாச படங்கள் எடுத்து. அவற்றையெல்லாம் காண்பித்து மிரட்டிக் கொண்டிருக்கும் கொடுமை இன்றைக்கு நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் எம்.பி.யை தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற தேர்தல். மத்தியில் யார் ஆட்சியில் இருக்க வேண்டும்? யார் பிரதமராக இருக்க வேண்டும்? இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய மாநிலத்தை யார் ஆள வேண்டும் என்ற முடிவோடு நடந்த தேர்தல் தான் போன மாதம் நடைபெற்ற எம்.பி தேர்தல். அப்பொழுது நீங்கள் எல்லோரும் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரம் பெற்ற மாணிக் தாகூர் அவர்களுக்கு கை சின்னத்தில் ஓட்டு போட்டு வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முடிவோடு கை சின்னத்துக்கு ஓட்டு போட்டுள்ளீர்கள் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

s3

 

ஒட்டு மொத்தமாக கை சின்னத்துக்கு போட்டுள்ள உங்கள் எல்லோருக்கும் முதலில் நான் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், மோடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டுமென்றும் முடிவு செய்து ஓட்டு போட்டு உள்ளீர்கள். காரணம் என்னவென்றால் மோடி ஒரு சாடிஸ்ட் மனப்பான்மை உள்ளவர். வேறொன்றுமில்லை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் 13 பேரை சுட்டுக் கொன்றார்கள். அந்த நேரத்தில் இந்தியாவின் பிரதமராக இருக்கக்கூடியவர் வந்து பார்த்திருக்க வேண்டும். தமிழ்நாட்டையும் சேர்த்துத்தான் இந்தியா இருக்கின்றது. எனவே நமக்கும் பிரதமர் அவர்தான். வந்து பார்த்தாரா ஆறுதல் சொன்னாரா என்றால் இல்லை. ஆறுதல் சொல்லவில்லை என்றால் கூட பரவாயில்லை, பத்திரிகை செய்திகளில், தொலைக்காட்சிகளில் இரங்கல் செய்தி சொல்லி இருந்தார் என்றால் அதுவும் சொல்லவில்லை. அதேபோல் தமிழ்நாட்டில் வர்தா புயல், கஜா புயல் என்று எத்தனையோ புயல்கள் வந்தது. எந்த புயலுக்கும் அவர் வந்து பார்க்கவில்லை. அதற்குரிய நிதியையும் அவர் கொடுக்கவில்லை.

 

வேறொன்றும் வேண்டாம் சமையல் கியாஸ் விலை 400 ரூபாய் இருந்தது இப்பொழுது 1000 ரூபாய். எனவே விலைவாசி அந்த அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த நாட்டின் முதுகெலும்பு என்று யாரைச் சொல்கின்றோம் என்றால் விவசாயிகளை தான். விவசாயிகள் இல்லை என்றால் நம்மால் வாழ முடியாது. அவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். அந்த விவசாயிகள் எத்தனை பேர் இந்த மோடி ஆட்சியிலும் எடப்பாடி ஆட்சியிலும் தற்கொலை செய்து கொண்டு இறந்து போயிருக்கிறார்கள். இன்னமும் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கின்றார்கள். விவசாய சங்கத்தைச் சார்ந்த விவசாய பெருங்குடி மக்கள் எல்லாம் டெல்லிக்குச் சென்று ரோட்டில் உட்கார்ந்து போராடினார்கள்.

 

பிச்சை எடுக்கும் போராட்டம், கண்ணைக் கட்டிக்கொண்டு போராட்டம், எலிக்கறி சாப்பிடும் போராட்டம், சாலைகளில் உருளும் போராட்டம், அரை நிர்வாண போராட்டம் போன்று விதவிதமான போராட்டம் நடத்தினார்கள். இதைவிடக் கேவலம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், முழு நிர்வாண போராட்டம் நடத்தினார்கள். ஆனால் பிரதமர் செய்திருக்க வேண்டும் என்றால், அனைவரும் கூப்பிட முடியாவிட்டாலும் குறிப்பிட்ட ஒரு சிலரை அழைத்து என்ன பிரச்சனை என்று கேட்டிருக்க வேண்டும். காரியங்கள் செய்கிறாரோ, இல்லையோ ஆறுதலாக நாங்கள் பார்க்கின்றோம் கவலைப்படாதீர்கள் என்ற ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நிம்மதியாக இருப்பார்கள். ஆனால் அவர் பார்க்கவில்லை. அவர் யாரை பார்த்தார் என்றால் பெரிய பணக்காரர்கள், கோடீஸ்வரர்கள், மிட்டா மிராசு தாரர்கள், பெரிய சினிமா நடிகைகள் நடிகர்கள் அவர்கள் எல்லோருக்கும் உடனடியாக அப்பாயின்மென்ட் கொடுத்து கேட்டு அவர்களுக்கு உண்டான காரியங்களை செய்து கொடுத்தார்.

 

பெரிய பணக்காரர்களுக்கு எல்லாம் வங்கிகளில் கடன்களை தள்ளுபடி செய்து இருக்கின்றார். விஜய் மல்லையா, லலித் மோடி போன்ற பெரிய கோடீஸ்வரர்களுக்கு கடனை தள்ளுபடி செய்து இருக்கின்றார். ஆனால் விவசாயிகள் வாங்கி இருக்கக்கூடிய கடனை தள்ளுபடி செய்ய முடியாத நிலையில் ஒரு பிரதமர். இதையெல்லாம் நீங்கள் சிந்தித்து பார்க்கவேண்டும் அதனால்தான் அவரை ஒழிக்க வேண்டும்.

 

பிரதமராக இருக்கக்கூடாது என்று முடிவு செய்து ஓட்டு போட்டீர்கள். எல்லோரும் கை சின்னத்துக்கு போட்டோம் என்று பெருமையோடு சொல்கின்றீர்கள்.

 

அதேபோல் தான் இங்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எடப்பாடி ஒரு உதவாக்கரை. உதவாக்கரை என்றால் எதற்கும் உதவாது, எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். காரணம் இன்றைக்கு அவர்கள் ஆட்சியை காப்பாற்றுவதுதான் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். காரணம் எந்த நேரத்தில் ஆட்சி கவிழும், ஆட்சி ஒழியும் என்று அதற்கு பயந்து கொண்டு என்ன என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். மோடியின் காலை பிடித்துக் கொண்டார்கள். மோடி இந்த ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். எனவே மோடி இல்லை என்றால் எடப்பாடியும் இங்கு இருக்க முடியாது.

 

மோடியால் தான் இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கின்றது. இவ்வளவு அயோக்கியத்தனம், கொள்ளை, கொலை, கமிசன், லஞ்சம், ஊழல் போன்றவை இந்த ஆட்சியில் நடக்கின்றது. எந்தப் பகுதிகளிலும் தண்ணீர் கிடையாது. இப்படி மக்கள் பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள். ஆனால் அதைப்பற்றி எல்லாம் இந்த ஆட்சி கவலைப்படவில்லை. எப்படியாவது இந்த ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், திட்டமிட்டு இருக்கின்றார்கள். அதற்கு மோடி பக்கபலமாக முட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். எனவே மோடியே இல்லை என்றால் இந்த ஆட்சி இருக்காது.

 

இன்னும் ஒன்று என்னவென்றால், கடந்த 18ஆம் தேதி 18 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. இப்பொழுது இந்த நான்கு தொகுதிகளில் நடைபெறுகின்றது. மொத்தம் 22 தொகுதிகளுக்கும் சேர்த்து வருகின்ற 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவந்து விடும். 23ஆம் தேதி முடிவுகள் வெளிவரும் பொழுது மோடி மட்டுமல்ல இங்கு இருக்கக்கூடிய எடப்பாடியும் காலியாக போகின்றார். எப்படி என்றால் இங்கு இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு மைனாரிட்டி ஆட்சியைத்தான் நடத்திக் கொண்டிருக்கின்றார்.

 

மெஜாரிட்டி ஆட்சி இல்லை. மொத்தம் 234 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றார்கள் என்றால், அந்த 234 பாதிக்கு மேல் அதாவது 118 இருந்தால்தான் ஆட்சியில் இருக்க முடியும். இன்றைக்கு அவர்களது எம்.எல்ஏ.க்கள் எண்ணிக்கையைப் பார்த்தால் அந்த எண்ணிக்கையில் இல்லை. தி.மு.க.விடம் காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என சட்டமன்ற உறுப்பினர்கள் என எல்லோரையும் சேர்த்து தி.மு.க.வில்  97 பேர் இருக்கின்றோம். எனவே 97ல் 22 என்ற எண்ணிக்கையும் சேரும் பொழுது, 119 வருகின்றது. மெஜாரிட்டி என்ற அடிப்படையில் 118 இருந்தால் போதும். 119 என்ற எண்ணிக்கை வந்தால் திமுக தான் ஆட்சிக்கு இயல்பாக வந்துவிடும். எனவே அந்த நிலை வரப்போகின்றது. இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

 

இப்பொழுது அ.தி.மு.க என்ன சூழ்ச்சி செய்து இருக்கின்றது என்றால், 10 நாட்களுக்கு முன்பு 3 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கப் போகின்றோம் என்று அறிவிப்பு வெளியிட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுத்து விட்டார்கள். நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இவை அனைத்திற்கும் சபாநாயகர் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் என்ன செய்தேன் என்றால், சபாநாயகர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று ஒரு கடிதத்தைக் கொடுத்து தீர்மானம் கொண்டு வர வேண்டும். சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வந்துவிட்டது என்றால், அவர் எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதற்காகத்தான் நான் அப்படி சொல்லி இருக்கின்றேன்.

 

எது எப்படி இருக்கின்றதோ, நான் உங்கள் எல்லோரையும் கேட்டுக் கொள்ள விரும்புவது, எம்.பி தேர்தலில் படு தோல்வி அடையப் போகிறார்கள். அடுத்தது, 22 எம்.எல்.ஏ தேர்தலிலும் படு தோல்வி அடையப் போகிறார்கள். இப்பொழுது இந்த ஆட்சி இருப்பதற்கு காரணமே மோடி அவர்கள் தான்.

 

வேறொன்றும் நான் கேட்க விரும்பவில்லை நம் தலைவர் கலைஞர் அவர்கள் மறைந்தார். மறைந்ததும் அண்ணாவிற்கு அருகில் அவரை அடக்கம் செய்ய வேண்டுமென்று 6 அடி நிலம் தான் கேட்டோம். ஏனென்றால் அவரது கடைசி ஆசை என்ன என்று கேட்டீர்கள் என்றால், அண்ணாவிடத்தில் சொன்னார். "அண்ணா இயற்கையின் சதி எமக்கு தெரியும் அண்ணா, இரவலாக உன் இதயத்தை தந்திடு அண்ணா, நான் வரும்போது கையோடு கொண்டு வந்து உன் கால் மலரடியில் வைப்பேன்" என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார்.  தலைவர் கலைஞர் அவர்கள் யார்? தி.மு.க தலைவர் மட்டுமா, எனக்கு அப்பா மட்டுமா, தலைவர் கலைஞர் அவர்கள் இதே தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்து எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றார்.

 

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருந்த 7,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி, நெசவாளர்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துள்ளார். அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு வேண்டிய வசதியை செய்து கொடுத்து இருக்கின்றார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்காக சமத்துவபுர வீடுகளை கட்டிக் கொடுத்தது. குறிப்பாக பெண்களுக்கு, தாய்மார்களுக்கு, சகோதரிகளுக்கு எத்தனையோ சிறப்பான பல திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றார். சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவிகிதம் இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு, கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித்தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வுத் திட்டம், ஏழை எளிய குடும்பத்தில் பிறந்திருக்கும் பெண்ணிற்கு திருமணம் உதவித் தொகை திட்டம், மகளிர் சுய உதவிக் குழு போன்றவ பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.

 

நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த பொழுது இந்த மாவட்டத்திற்கு பலமுறை வந்து மகளிர் சுய உதவிக் குழுவிற்காக சுழல்நிதி கொடுத்துள்ளேன். தற்பொழுது கிடைக்கின்றதா என்றால் கிடைக்கவில்லை. மானியக் கடனும் வழங்குவதில்லை தி.மு.க ஆட்சி இருந்த பொழுது கடன் வாங்குவதற்காக வங்கிகளுக்கு சென்றீர்கள் என்றால், தகுந்த மரியாதை கொடுத்து நடத்தி வந்தார்கள் ஆனால் இப்பொழுது வங்கிகளுக்கு சென்றீர்கள் என்றால் விரட்டியடிக்கின்ற நிலை, இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. நம் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சி நடத்திய நேரத்தில் அவ்வளவு வசதிகள் செய்து கொடுத்தார்.

 

இந்தியாவிற்கு பிரதமர்களை உருவாக்கித் தந்தவர். இந்தியாவிற்கு ஜனாதிபதிகளைத் தேர்ந்தெடுத்தவர். நம்முடைய தமிழ்மொழிக்கு செம்மொழி என்கின்ற அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவர் தான் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். அவருக்கு 6 அடி இடம் கொடுக்க முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சொன்னார்.

 

நான், தங்கை கனிமொழி, ஐ.பெரியசாமி  என எல்லோரும் நேரடியாக சென்றோம். வெட்கத்தைவிட்டு சொல்லுகின்றேன். அவரது கையை பற்றிக்கொண்டு கேட்டோம். என்னுடைய அப்பாவிற்காக நான் வரவில்லை, கட்சியின் தலைவராக வரவில்லை, நாட்டின் தலைவருக்காக வந்திருக்கின்றோம்.

 

ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவருக்காக வந்திருக்கின்றோம். 6 அடி இடம் அவருடைய ஆசை அதைக் கொடுங்கள் என்று கேட்ட பொழுது, முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார். அதன் பிறகு நீதிமன்றத்திற்கு சென்றோம் அங்கு நீதிமன்றத்தில் நமக்கு வெற்றி கிடைத்தது. அதன் பிறகு நம் தலைவர் அவர்களை அண்ணா அவர்களுக்கு அருகில் அடக்கம் செய்தோம். இருந்தாலும் நான் உங்கள் எல்லோரையும் கேட்டுக் கொள்ள விரும்புவது. நம் தலைவர் கலைஞர் அவர்களுக்கு, 6 அடி இடத்தை கொடுக்காதவர்களுக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்கலாமா? இந்த கேள்வியை தான் நான் உங்களிடத்தில் கேட்கின்றேன்.

 

எனவே இதை மனதில் பதிய வைத்துக் கொண்டும். அதுமட்டுமல்லாமல் நாட்டில் விலைவாசி ஏறி விட்டது, தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. குடிநீருக்கு தட்டுப்பாடு இன்று இருந்து கொண்டிருக்கின்றது. தற்போது இந்த நிலைதான் இருக்கின்றது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுவோம் என்று மிகத் தெளிவாக சொல்லி இருக்கின்றோம். விவசாயிகளின் கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்வோம்‌. ஜி.எஸ்.டி வரியை சீர் படுத்தும் முயற்சியில் ஈடுபடுவோம். மாணவர்கள் கல்விக்காக வாங்கி இருக்கக் கூடிய கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்வோம். உங்கள் குடும்ப சூழ்நிலை கருதி நீங்கள் எல்லோரும் உங்களது தோடு, மூக்குத்தி, கம்மல், தாலி செயின் போன்றவற்றை அடகு வைத்திருக்கின்றீர்கள், அவை அத்தனையும் மீட்டு உங்களிடத்தில் ஒப்படைப்போம் என்ற அந்த உறுதிமொழியை சொல்லி இருக்கின்றோம்.

 

நான்கைந்து மடங்கு உயர்த்தப்பட்டிருக்கும் கேபிள் டிவி கட்டணம் 250 ரூபாய் உயர்ந்து விட்டது. ஏற்கனவே தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் 50 ரூபாய் இருந்தது. எனவே கேபிள் டிவி கட்டணத்தை மீண்டும் பழைய கட்டணமான 50 ரூபாய்க்கு கொண்டுவருவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கின்றோம். 100 நாள் வேலையை 150 நாள் ஆக்குவோம் என்றும் சொல்லி இருக்கின்றோம். குடிநீரை விற்கின்ற கொடுமை நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. எனவே இதையெல்லாம் சீர்படுத்துகின்ற நிலையில் நிச்சயமாக நீங்கள் 19ஆம் தேதி நடக்கின்ற தேர்தலில், நம்முடைய டாக்டர்.சரவணன் அவர்களுக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

 

டாக்டர்.சரவணனைப் பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை, ஏற்கனவே இந்த தொகுதியில் நின்றார். ஆனால், வெற்றி வாய்ப்பை இழந்தார். இப்பொழுது கூட வெற்றி வாய்ப்பை இழக்க வில்லை நீதிமன்றத்திற்கு சென்று வெற்றி வாய்ப்பை பெற்று விட்டு வந்து விட்டார்.

 

ஏனென்றால் இதற்கு முன்பு நடந்த தேர்தல் செல்லாது என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. ஏனென்றால் தேர்தல் நடைபெற்ற பொழுது அம்மையார் ஜெயலலிதா அவர்களிடம் நாமினேசன் மனுவில் கையெழுத்து வாங்க முடியவில்லை. அதை அவர்கள் சொல்லியிருக்கலாம். ஆனால் நன்றாக இருக்கின்றார் என்று பொய் சொல்லி, அதன் பிறகு கைரேகை வாங்கி இருக்கின்றார்கள். அந்த கைரேகையை கூட அம்மையார் அவர்கள் சுயநினைவோடு இருந்த பொழுது வாங்க வில்லை என்பதுதான் இவருடைய குற்றச்சாட்டு, நம்முடைய கழகத்தின் குற்றச்சாட்டு. அது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஏறக்குறைய இரண்டு வருடங்கள் வழக்கு நடைபெற்ற நிலையில், ஏற்கனவே வெற்றி பெற்ற அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இறந்துவிட்டார். அவர் இறந்ததற்கு பிறகு இப்பொழுது தீர்ப்பு வந்துள்ளது.

 

என்னவென்றால், அந்தத் தேர்தல் செல்லாது என்று. இதிலிருந்து நீங்கள் புரிந்துகொள்ளலாம். அயோக்கியத்தனம் செய்து, ப்ராடுதனம் பண்ணி, குருட்டுத்தனமான காரியங்களை கையாண்டு, சுயநினைவில்லாமல் இருக்கக்கூடிய ஜெயலலிதா அவர்களை இதற்கு பயன்படுத்தி, அக்கிரமம் செய்தவர்கள் தான் அ‌.தி‌.மு‌.க வைச் சேர்ந்தவர்கள். அவ்வளவு அக்கிரமம் செய்து இருக்கின்றார்கள். இன்றைக்கு யாரால் மந்திரியாக இருக்கின்றார்கள், யாரால் அ.தி.மு.க எம்.பி.யாக இருக்கிறார்கள், யாரால் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருக்கின்றார்கள், யாரால் இன்றைக்கு கொள்ளையடித்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்றால் அம்மையார் ஜெயலலிதா அவர்களால் தான். அந்த அம்மையார் இல்லையென்றால் இவர்கள் எல்லோருக்கும் அட்ரஸே இல்லை. ஆனால் அந்த அம்மையாரைப் பயன்படுத்திக்கொண்டு இவ்வளவு அயோக்கியத்தனம் செய்திருக்கின்றார்கள். எனவே மோடிக்கு எப்படி ஒரு பாடம் புகட்டினீர்களோ, அதேபோல் எடப்பாடிக்கும் ஒரு புத்தி புகட்ட வேண்டும்.

 

எனவே அவற்றிற்கெல்லாம் நீங்கள் சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என்று சொன்னால், வருகின்ற 19ஆம் தேதி நடைபெறக்கூடிய தேர்தலில் நம்முடைய வேட்பாளர் டாக்டர்.சரவணன் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க உதயசூரியன் சின்னத்திற்கு நீங்கள் எல்லோரும் ஆதரவு தரவேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொண்டு உங்கள் அன்பிற்கும் உற்சாகத்திற்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.’’

 

சார்ந்த செய்திகள்