சிதம்பரம் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டனியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு திரட்டி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை, சிதம்பரம் நகரம் உள்ளிட்ட இடங்களில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் பானைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிற தேர்தல் இதுவரை நடக்காத வித்தியாசமான தேர்தல். இது யார் பிரதமராக வரக்கூடாது என்பதற்கான தேர்தல். மோடி என்கிற நாசக்கார சக்தி, பாஜக என்கிற பயங்கரவாத கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கானது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை நாசப்படுத்திய மோடிக்கு முடிவு கட்டும் தேர்தல். கடந்த 10 வருடத்திற்கு முன்பு விலைவாசி எப்படி இருந்தது. தற்போது எரிவாயு, பெட்ரோல், டீசல் பன்மடங்கு உயர்ந்து மக்கள் மீளமுடியாத விலைவாசி உயர்வால் தினந்தோறும் அவதி அடைகின்றனர். இதில் ஜிஎஸ்டி வரியைப் போட்டு மக்களை நசுக்கி வருகிறது.
தமிழ்நாட்டின் உரிமையைக் காட்டி கொடுக்க பாஜகவுடன் பாமக கூட்டணி சேர்ந்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் கல்வி, வேலைகளைத் தட்டிப் பறித்து மேல் சாதிக்காரனுக்கு தாரை வார்த்துள்ளார் மோடி. இட ஒதுக்கீட்டையும், வேலையையும் பறித்த மோடியைக் கண்டித்து பாமக ஒரு நாளாவது போராட்டம் நடத்தி இருக்குமா? இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படும் பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். இது என்ன ஞாயம்? இவர்களுக்கு கல்வி உரிமையும், வேலை, இடஒதுக்கீடு உரிமையை மறுத்தபோது போராடியவர் திருமா தான். நெய்வேலி என்எல்சி யில் வன்னியர் சமூக இளைஞர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என ராஜசபாவில் அன்புமணி பேசினாரா? கல்விக்கடனை ரத்து செய்யப் பேசினாரா? வெறும் சாதி பெருமை பேசினால் போதாது.
மோடிக்கு கூஜா தூக்கிய எடப்பாடியும் தமிழகத்தில் என்ன செய்தார் என்பதை கூற முடியாது. விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு யோக்கியர் போல் பேசுகிறீர்களே நீங்கள் மோடிக்கு அடிமையாக இருந்தது தெரியாதா? அமலாக்கத்துறை அனைவர் வீட்டுக்கும் செல்கிறது ஆனால் எடப்பாடி மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டிற்கு ஏன் செல்லவில்லை? இதில் இருந்தே தெரியவில்லையா மோடிக்கும் எடப்பாடிக்கும் ரகசிய ஒப்பந்தம் உள்ளது. அதற்காக தமிழ்நாட்டு மக்களை அடிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் அதிமுக என்ற அடிமைக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்.
இங்கே நிற்கக்கூடிய வேட்பாளர்கள் திருமாவுக்கும் எதிராக இணையான வேட்பாளர்களா? இவரது கல்வி தகுதிக்கும், பேச்சுக்கும், பாராளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுப்பதை அவர்கள் கொடுப்பார்களா? அவர்கள் அடிமையாக தான் இருப்பார்கள். எனவே பானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்திய அளவில் கவனிக்கக் கூடிய தலைவராக திருமா திகழ்கிறார். அவர் இந்த தொகுதி பிரதிநிதி மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பிரதிநிதி ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக செயல்படுகிறார். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது தான் நமக்கு பெருமை. ஏப்ப சாப்பைகளை அனுப்பி என்ன பயன் எனவே சிந்தித்து திருமாவை தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெறவைப்பது நமது கடமை” எனப் பேசினார்.
இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேலிடப்பார்வையாளர் பாவரசு, கட்சியின் மாவட்டச்செயலாளர் அரங்கத்தமிழ்ஒளி, முன்னாள் மாவட்டச்செயலாளர் பால.அறவாழி, திராவிடர் கழக மாவட்டச்செயலாளர் சித்தார்த்தன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.