புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட காவிரி படுகை கரைகளில் அரசு சார்பில் மரங்கள் நடப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக சத்குரு-ஜகி வாசுதேவ் தலைக்காவேரியில் இருந்து திருவாரூர் வரை மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து புதுச்சேரிக்கு வந்த சத்குரு கம்பன் கலையரங்கில் ‘காவேரி கூக்குரல்’ இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடினார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய முதல்வர் நாராயணசாமி, “காவிரி படுகையில் இருந்த மரங்களை வியாபாரத்திற்காக வெட்டி எடுத்ததால் பருவநிலை மாறி மழை பொழிவது நின்றதன் காரணமாக காவிரி நீருக்காக புதுச்சேரி மாநிலம் உச்சநீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது. வியாபார ரீதியாக இயற்கையை அழிப்பதன் காரணமாக நாட்டில் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுகிறது. நீர் நிலைகளை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். தனியார் பங்களிப்போடு புதுச்சேரியில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க தூர்வாரப்பட்டு வருகிறது. காவிரியில் வெள்ளம் மற்றும் வறட்சி என்றால் காரைக்கால் மாவட்டம் பாதிக்கப்படுவதால் காரைக்காலில் உள்ள காவிரிப்படுகையில் உள்ள கரைகளில் மாநில அரசு சார்பில் மரங்கள் நடப்படும். செந்த நிலங்களில் காடு வளர்ப்பவர்களுக்கு இலவசமாக மரங்களையும் மாநில அரசு வழங்கும்” என்றார்.