சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த ஆம்ஸ்ட்ராங்கை நேற்று (06-07-24) அவரது வீட்டின் அருகே இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி படு கொலை செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அவரது வீட்டின் அருகே 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களைப் போல் உடை அணிந்து கொண்டு வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதாகப் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது.
இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலா, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக, ஆற்காடு சுரேஷின் சகோதரர் தனது கூட்டாளிகளோடு இந்தக் கொலையை செய்துள்ளதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்திருந்தார். அதில், தனது அண்ணனைக் கொலை செய்ததது மட்டுமல்லாமல், ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் தன்னையும் மிரட்டி வந்தததால், இதனால் தனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் என்று எண்ணி ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் அன்று ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாகக் கூறினர். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பட்டினப்பாக்கம் பகுதியில் ஆற்காடு சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. உண்மையான குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். 8 பேர் சரணடைந்துவிட்டதால் புலன் விசாரணையைக் காவல்துறை முடித்துவிடக் கூடாது. ஆம்ஸ்ட்ராங் போன்றோருக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். கூலிப் படைக்கும்பலை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும்” என்று கூறினார்.