உதயநிதி ஸ்டாலினின் திருக்குவளை வருகையால், டி.ஐ.ஜி தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், உதயநிதி மேடையில் ஏரி பிரச்சாரம் செய்தால், கைது செய்வோம் எனக் காவல்துறையினர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்பொழுது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரச்சாரப் பயணத்தை துவங்குவதற்காக, இன்று மாலை 3 மணிக்கு, திருவாரூர் வந்தடைந்தார். அங்கு சன்னதி தெருவில் இருக்கும் கலைஞரின் சகோதரி வீட்டில், மதிய உணவை முடித்துக்கொண்டு, கலைஞரின் தாயார் சமாதியிருக்கும் காட்டூருக்குச் சென்று வணங்கினார். அப்போதே காவல்துறையினர் ஐந்து கார்களுக்கு மேல் சென்றால் கைது செய்வோம் எனக் கூறியிருந்தனர்.
இந்நிலையில், திருக்குவளையில் தடையை மீறி பிரச்சாரம் மேற்கொள்ள வந்ததாக, உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்து, திருமண மண்டபம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றனர். உதயநிதியின் கைதை எதிர்த்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் அங்கிருந்த தி.மு.க தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். அதேபோல் எத்தனை இடையூறுகள் வந்தாலும் தி.மு.க பிரச்சாரம் தொடரும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.