Skip to main content

’’வேறொரு காரில் அமீரை பத்திரமாக அழைத்துச் சென்று காப்பாற்றியுள்ளார் தனியரசு! ’’- மணியரசன்

Published on 10/06/2018 | Edited on 10/06/2018
ameer

 

புதிய தலைமுறை – அமீர் – தனியரசு மீது வழக்கு:  தமிழ்நாட்டை உ.பி.யாக மாற்றுகிறது பா.ச.க!  என்று  தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

அவர் மேலும், ’’ புதிய தலைமுறை தொலைக்காட்சி கோவையில், “தொடர் போராட்டங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கா? அரசியல் காரணங்களுக்கா?” என்ற தலைப்பில் நடத்திய “வட்டமேசை” விவாத படப்பிடிப்பில் கலந்து கொண்டு கருத்துக் கூறியதற்காகத் திரைப்பட இயக்குநர் அமீர் அவர்கள் மீதும், அமீரைத் தூண்டி விட்டார் என்று கொங்கு இளைஞர் பேரவைத் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான உ. தனியரசு அவர்கள் மீதும் காவல்துறை குற்ற வழக்குப் பதிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது; கண்டனத்திற்குரியது! 

  

வட்டமேசை விவாதத்தில் கலந்து கொண்ட பா.ச.க.வின் தமிழ்நாடு தலைவர் தமிழிசை சௌந்தரராசன், தூத்துக்குடி கலவரத்துக்குக் காரணம் சமூக விரோதிகளே என்று பேசிய போது, அமீர் குறுக்கிட்டு இரண்டாண்டுகளுக்கு முன், கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையை ஒட்டி மிகப்பெரிய அளவில் நடந்த வன்முறை வெறியாட்டத்தை நடத்தியவர்கள் சமூக விரோதிகள்தானா என்று கேட்டுள்ளார். 

 

உடனே, அங்கு பார்வையாளர் பகுதியில் இருந்த மாவட்டத் தலைவர் உள்ளிட்ட பா.ச.க.வினர் கூச்சல் எழுப்பி அமீரைத் தாக்க முனைந்துள்ளனர். நிகழ்ச்சியைத் தொடர விடாமல் தடுத்து விட்டனர். அப்போது உ. தனியரசு தலையிட்டு அமைதி காக்கக் கூறியுள்ளார். தகராறு செய்த பா.ச.க.வினர் கேட்கவில்லை. காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனரே அன்றி, தலையிட்டு பா.ச.க.வினரின் அடாவடித்தனத்தைத் தடுக்கவில்லை. 

 

தனியரசு, அமீரைப் பாதுகாப்பாக தனது காரில் அழைத்துக் கொண்டு வெளியேறியுள்ளார். அவரைத் தொடர்ந்து கொங்கு இளைஞர் பேரவையினர் தங்கள் கார்களில் வெளியேறி உள்ளனர். இரு சக்கர ஊர்திகள்  அந்தக் கார்களைத் துரத்திச் சென்ற பா.ச.க.வினர், வழிமறித்துத் தாக்கி, கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். ஆனால் காருக்குள் அமீர் இல்லாததால் திரும்பி விட்டனர். வேறொரு காரில் அமீரை பத்திரமாக அழைத்துச் சென்றுள்ளார் தனியரசு! 

 

காவல்துறையினர் அமீர் மீது மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய குற்றத்திற்கான இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவுகள் 153 (A), 505 ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். இந்தக் குற்றங்களைச் செய்யுமாறு அமீரைத் தூண்டியதாகத் தனியரசு மீதும் வழக்கு! 


அதோடு விடவில்லை காவல்துறை! புதிய தலைமுறைத் தொலைக்காட்சி நிறுவன நிர்வாகிகள் மீதும், அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அதன் கோவைச் செய்தியாளர் மீதும் வழக்குப் பதிந்துள்ளார்கள். வகுப்புக் கலவரத்தைத் தூண்டியதாக 153(A), 505 பிரிவுகளிலும், தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக 3(1) (PPD) பிரிவிலும் வழக்குப் போட்டுள்ளார்கள். 

அமீரைத் தாக்கச் சென்று ஊர்திகளை சேதப்படுத்திய பா.ச.க.வினர் எட்டு பேர் மீது தனியரசுத் தரப்பு வற்புறுத்தியபிறகே, வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். 

 

பா.ச.க. ஆட்சியில் உத்திரப்பிரதேசத்தில் நடத்துகின்ற வன்முறைகளைப் போல் தமிழ்நாட்டிலும் பா.ச.க.வினர் நடத்தத் துணிந்துவிட்டனர் என்பதையே கோவை நிகழ்வு காட்டுகிறது. உ.பி.யில் பா.ச.க. ஆட்சியில் பா.ச.க.வினரின் வன்முறையைக் காவல்துறை தடுக்காது – உரிய நடவடிக்கை எடுக்காது என்பதைப்போல்தான் தமிழ்நாடு காவல்துறை கோவையில் உள்நோக்கத்தோடு செயல்பட்டுள்ளது. 

 

கலாட்டா செய்த பா.ச.க.வினர் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்நிகழ்வை ஏற்பாடு செய்த புதிய தலைமுறைத் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதும், அதில் பேசிய அமீர் மற்றும் தனியரசு மீதும் வழக்குத் தொடர்ந்திருப்பது, கருத்துரிமையை முடக்கி, அவர்களை பா.ச.க.வினருக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்காமல் அச்சுறுத்தும் செயலாகும்! 

 

தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் பா.ச.க.வின் கைக் கருவியாக செயல்பட்டு தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை பா.ச.க.வினர் கெடுக்கத் துணைபோகிறார்கள். பா.ச.க.வினரின் எதேச்சாதிகார வாதங்களுக்கு மாற்றுக் கருத்து கூறினால் கூட, பா.ச.க.வினர் தாக்குதலில் ஈடுபடுவார்கள் என்பதற்குக் கோவை நிகழ்வே சான்று!

 

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நல்லிணக்கத்தில், தமிழர்களின் கருத்துரிமையில் அக்கறை கொண்டிருந்தால், மேற்படி படப்பிடிப்பின்போது கலாட்டா செய்த பா.ச.க.வினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆணையிட வேண்டும். பா.ச.க.வினர் 8 பேர் மீது பதிந்த வழக்கில் அவர்களைக் கைது செய்ய வேண்டும். இயக்குநர் அமீர், சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு, புதிய தொலைக்காட்சி நிறுவனம், அதன் செய்தியாளர் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகளைக் கைவிடச் செய் வேண்டும்.

 

தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லாமலே, மக்கள் செல்வாக்கு இல்லாமலே நடுவண் அதிகாரத்தை வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டை உத்திரப்பிரதேசம் போல் கலவர பூமியாக மாற்ற முனைந்துள்ள பா.ச.க.வினரை எதிர் கொள்ளத் தமிழர்கள் – மனித உரிமைக் காப்பு அடிப்படையில் ஒருங்கிணைய வேண்டும்! 
’’என்று தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்