கேரள மாநிலம், கண்ணூரில் இன்று (09/04/2022) மாலை 06.00 மணிக்கு நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 23 வது மாநாட்டில் கலந்துக் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் கூறியதாவது, "சிபிஎம் மாநாட்டில் ஒன்றிய- மாநில அரசுகளின் உறவு குறித்து பேசுவதில் மகிழ்ச்சி. ஒன்றிய- மாநில அரசுகளின் உறவு குறித்து பேசும் உரிமை தமிழ்நாடு, கேரளாவிற்கு அதிகம் உண்டு. இந்தியா காப்பாற்றப்பட வேண்டும் என்றால் முதலில் மாநிலங்களைக் காப்பாற்ற வேண்டும். இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்கள், பொதுவுடைமை புரட்சியாளர்கள் சிறை வைக்கப்பட்டிருந்த இடம் கண்ணூர். பல்வேறு செயல்பாடுகளுக்காக விருதுகளைப் பெற்று விருதுகளின் முதலமைச்சராக பினராயி விஜயன் உள்ளார்.
ஒரு மாநிலத்தில் ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் பினராயி விஜயன். எனக்கு ஒரு வழிகாட்டும் முன்னோடி முதலமைச்சராக பினராயி விஜயன் இருக்கிறார். ஒரு கையில் போராட்ட குணம், ஒரு கையில் தொலைநோக்கு திட்டத்துடன் செயல்பட்டு வருகிறார் பினராயி விஜயன். வேற்றுமைகள் அனைத்தையும் அழித்து ஒற்றைத்தன்மையை உருவாக்க நினைக்கிறார்கள். பிரிட்டிஷ்காரர்கள் கூட இவ்வளவு அதிகாரம் கொண்ட ஒற்றைத்தன்மையை உருவாக்க முயற்சிக்கவில்லை. சிலர் அரசியல் அரிச்சுவடியை மாற்றுகிறார்கள்.
இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமென்றால் முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். கிராமங்கள் வளர்ந்தால்தான் மாநிலங்கள் வளரும்; மாநிலங்கள் வளர்ந்தால்தான் நாடு வளரும். அரசியலமைப்பு வழங்கியுள்ள அதிகார வரம்புகளைக் கடந்து, தனது அதிகாரத்தை விரித்துச் செல்கிறது ஒன்றிய அரசு. மாநிலங்களைப் பழி வாங்குவதாக நினைத்து மக்களைப் பழிவாங்குகிறார்கள். மாநிலங்களின் பிரச்சனைகளை முறையிடும் திட்டக்குழு, தேசிய வளர்ச்சிக்குழுவை மத்திய அரசு கலைத்துவிட்டது.
நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக எல்லா சட்டங்களையும் மத்திய அரசே முடிவு செய்கிறது. நீட் விலக்கு மசோதாவை இன்னமும் குடியரசுத்தலைவருக்கு தமிழக ஆளுநர் அனுப்பவில்லை. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலம் ஆட்சியை நடத்த முயற்சிப்பதுதான் சட்டத்தின் ஆட்சியா? தென் மாநிலங்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து நாம் போராட வேண்டும். மாநிலங்களின் உரிமைகளுக்காகப் போராட தென் மாநில முதலமைச்சர்களின் குழுவை அமைக்க வேண்டும். மாநில முதலமைச்சர்கள் தலையாட்டிப் பொம்மைகளாக இருக்க வேண்டும் என நினைக்கிறது மத்திய அரசு. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு மட்டும் ரூபாய் 21,000 கோடி நிதி வரவேண்டியுள்ளது" எனத் தெரிவித்தார்.