மின்சார வாரியம் எவ்வளவு கடனில் இருக்கிறதென்று யோசிச்சு பாருங்க சார். உற்பத்தி செலவையும், நிர்ணயித்த விலையையும் ஒப்பீடு செய்யுங்கள் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநாகர திமுக சார்பில் 3500 பயனாளிகளுக்கு சேலை, தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மூலப்பொருட்களின் விலை கூடிவிட்டது. இதன் பின் உற்பத்திப் பொருளை பழைய விலைக்கே கொடுக்க முடியுமா. மின்கட்டண உயர்வுக்கு தமிழக அரசுக்கும் மின்சாரத்துறைக்கும் தொழில்முனைவோர்கள் ஒத்துழைப்பு தாருங்கள். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மின் கட்டணம் குறைந்த அளவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாரியம் எவ்வளவு கடனில் இருக்கிறதென்று யோசிச்சு பாருங்க சார். உற்பத்தி செலவையும், நிர்ணயித்த விலையையும் ஒப்பீடு செய்யுங்கள். ஒரு தரப்பு பாதிப்பினை மட்டும் பார்க்காதீர்கள். இரு தரப்பினையும் பார்க்கும் போது தான் என்ன பாதிப்பு ஏற்படுகிறதென்று தெரியும். ஒரே வருடத்தில் கர்நாடகாவில் மூன்று முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தொழில்முனைவோரைக் கேட்டுக் கொள்வதெல்லாம் மின்கட்டண உயர்விற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்” எனக் கூறினார்.