"வார விடுமுறை நாட்களில் அலுவலகத்திற்கு வரவழைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு மட்டுமில்லாமல், வேலையையும் பறித்துவிட்டார் தால்தார் ஒருவர் " என மாவட்ட ஆட்சியரிடம் மீ டூ புகாரை அளித்துள்ளார் பெண் தட்டச்சர் ஒருவர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை காமாட்சி தெருவினை சேர்ந்த சரண்யா என்கின்ற இளம்பெண் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தவர், " குடும்பத் தகராறில் உடலில் தீக்காயம் ஏற்பட்டு ஊனமான எனக்கு கருணை அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொகுப் புதிய ஊதியத்தில் பேரிடர் மேலாண்மை பிரிவில் தட்டச்சர் வேலை கிடைத்தது. அந்த வருமானத்தைக் கொண்டு எனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தேன். இந்நிலையில், அங்கு வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த திருப்பதி என்பவர், வார விடுமுறை நாட்களில் என்னை வரவழைத்து வேலை செய்யும் பொழுது அவருடைய காலைக் கொண்டு, என் காலில் உரசியும், இரட்டை அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகளைக் கூறியும் பாலியல் ரீதியாக என்னை துன்புறுத்தினார். இதனை டி.ஆர்.ஓ.விடம், ஆட்சியரிடம் எடுத்துக் கூறினேன். பலனில்லை. 4 வருடமாக நான் பார்த்த வேலையையும் பறித்து விட்டார். என்னைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்." என்றார் அவர். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.