கொள்ளையடித்து விட்டு கண்மண் தெரியாமல் ஓடிய கொள்ளையர்கள் கிணற்றில் விழுந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை குஞ்சிபாளையத்தை சேர்ந்த விவசாயி பிரதீப் என்பவர் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அதிகாலை சுமார் மூன்று மணியளவில் வீட்டின் பின் பக்க கதவை உடைத்துக் கொண்டு இரண்டு மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். பிரதீப்பின் மனைவி மகாலட்சுமி சத்தம் கேட்டு எழுந்தார். அப்பொழுது பதுங்கியிருந்த இருவரும் கத்தியைக் காட்டி மிரட்டி மகாலட்சுமி அணிந்திருந்த இரண்டரை பவுன் நகையைப் பறித்துச் சென்றனர். உடனே வீட்டில் இருந்தவர்கள் 'திருடன்... திருடன்...' எனக் கூச்சலிட்டனர். அங்கிருந்து தப்பி ஓடிய அந்த இரண்டு நபர்களும் அங்கிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காளிபாளையம் பகுதிக்குச் சென்றனர். அங்கு பால் கறப்பதற்காக நின்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் கத்தியைக் காட்டி மிரட்ட முயன்றனர்.
அந்த பெண்ணும் திருடன் என கூச்சலிட்டதால் அந்த இரு நபர்களும் ஓடினர். அந்தப் பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு திருடர்களைத் துரத்தினர். இதில் கண் மண் தெரியாமல் ஓடிய இருவரும் விவசாய நிலத்தில் இருந்த 60 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தனர். வெறும் மூன்றடிக்கு மட்டுமே கிணற்றில் தண்ணீர் இருந்தது. விவசாயக் கிணற்றின் பாம்பேறி பகுதியில் சிக்கிய ஒரு நபர், மற்றொருவரை தவிக்க விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டான். உடனடியாக அந்தப் பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கயிறு மூலம் கிணற்றில் விழுந்த திருடனை மீட்டனர்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் ரமேஷ் என்பதும் மற்றொருவர் ஹரீஷ் என்பதும், இவரும் தேனியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் தேனியில் இருந்து ரயில் மூலமாக பொள்ளாச்சிக்கு வந்து பின்னர் மது அருந்திவிட்டு திருட்டில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது. தற்பொழுது காலில் அடிபட்ட ரமேஷ் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், ரமேஷ் வருவான் என பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் காத்திருந்த ஹரீஷையும் போலீசார் கைது செய்துள்ளனர்.