வேலூர், சேண்பாக்கம் ஜீவா தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 45). இவர் வேலூரில் ஒரு வீட்டில் சமையல் வேலை செய்து வருகிறார். இவருக்கு 17 மற்றும் 15 வயதுகளில் 2 மகன்கள் உள்ளனர். இளைய மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் பிற்பகல் 2 மணி அளவில் வீட்டைப் பூட்டிவிட்டு விளையாடச் சென்றதாகத் தெரிகிறது.
பின்னர் மாலை 4 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு மாயமாகி இருந்தது. மேலும் மற்றொரு கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து தியாகு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் மர்ம நபர் ஒருவர் இருந்துள்ளார். அவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தியாகு, நீ யார்? என்று கேட்டார். அதற்கு அந்த நபர் உனது உறவினர் எனக் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த தியாகு, வெளியே சென்று கதவைப் பூட்டியுள்ளார். மேலும் அவர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் தனது அம்மாவுக்கும் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் லட்சுமி இது குறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் கதவைத் திறந்து பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த அந்த நபர் தூக்கில் பிணமாகத் தொங்கியுள்ளார்.
பின்னர் அவரது உடலைப் போலீசார் கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தது. போலீசாரின் விசாரணையில், வீட்டுக்குள் தற்கொலை செய்த நபர் திருப்பத்தூர் மாவட்டம் கடாம்பூர் பகுதியைச் சேர்ந்த பூபதி (45) என்பதும் அவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், தற்கொலை செய்து கொண்ட பூபதி மீது வேலூர் வடக்கு, உமராபாத் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. லட்சுமி வீட்டுக்குத் திருடச் சென்றபோது அங்கு மாட்டிக் கொண்டுள்ளார். பின்னர் போலீசாரிடம் சிக்கி விடுவோமோ என்ற அச்சத்தில் அவர் வீட்டிலேயே அங்கிருந்த புடவையை எடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். இந்நிலையில், திருடச் சென்ற இடத்தில் திருடன் தூக்கிட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.