சிலர் பாகிஸ்தானில் யூடியூப் சேனலை வைத்துக்கொண்டு இந்தியா பற்றி அவதூறு பரப்புவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், ''காங்கிரசை போன்று அல்லது மற்ற கட்சிகளை போன்று ஊடக சகோதரர்களின் குரல்வலைகளை நெரிப்பவர்கள் அல்ல நாங்கள். அரசியலமைப்புச் சட்டத்தில் கருத்து சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதோடு, மிஸ் இன்ஃபர்மேஷன் ஃபால்ஸ் இன்பர்மேஷன், ஃபால்ஸ் ரெப்ரசன்டேஷன், தேசத்திற்கு எதிராக செயல்படுவது, பொதுமக்களின் சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்படுவது, இந்திய ராணுவத்திற்கு எதிராக செயல்படுவது இதெல்லாம் மிக மிகக் கடுமையான குற்றமாகும். அப்படி செயல்படுகின்ற யூடியூப் சேனல்கள், ட்விட்டர், முகநூல் பக்கங்கள் என கிட்டத்தட்ட இந்த இரண்டு வருடத்தில் 100க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களை நாம் முடக்கி இருக்கிறோம். அதேபோல் சிலர் ஆபீசையை பாகிஸ்தானில் வைத்திருக்கிறார்கள். பாகிஸ்தானில் இருந்து கொண்டு நமது இந்தியாவைப் பற்றி தவறான தகவல்களை, ராணுவத்தைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இப்படி தவறான தகவல்களை பரப்புகின்ற எந்த சேனலாக இருந்தாலும், அமைப்பாக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.