படம் மாடலே
கரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது 5ம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவி வரும் கரோனாவை கட்டுப்படுத்த இந்த மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. நேற்று நள்ளிரவு முதல் இந்த ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. வரும் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
பணிக்கு செல்லும் 33 சதவீத மத்திய-மாநில அரசு ஊழியர்கள் உரிய அடையாள அட்டையை காண்பித்தால் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அரசு ஊழியர்கள் தங்களது அடையாள அட்டையை வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாரிடம் காண்பித்து அலுவலகத்திற்கு செல்கின்றனர்.
இந்த நிலையில் ஊரடங்கின் முதல் நாளான இன்று அரசு அலுவலங்களில் ஊழியர்கள் சிலர் வரவில்லை. இதுபற்றி அந்த அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் கூறும்போது, உயர் பொறுப்பில் உள்ளவர்களை போலீசார் விட்டுவிடுகின்றனர். அதேபோல் நகரத்திற்குள் இருந்து வரும் ஊழியர்களையும் விட்டுவிடுகிறார்கள். மாவட்ட எல்லையில் இருந்து வரும் ஊழியர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. அடையாள அட்டை இருந்தும் அவர்களை அனுமதிக்கவில்லை என்கின்றனர்.
பத்திரப் பதிவு அலுவலகம் ஒன்றில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் கூறுகையில், கரோனா தொற்று இருப்பதால் அரசு விதித்த கட்டுப்பாடுகள் படி குறைந்த ஊழியர்களை வைத்துதான் இந்த அலுவலகம் இயங்குகிறது. பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தில் என்னென்ன நடைமுறைகள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொரு நடைமுறையையும் ஒவ்வொரு ஊழியர் செய்வார். அவர்களில் ஒருவர் வரவில்லை என்றால், உயர் அதிகாரிகள் முதல் அனைத்து ஊழியர்கள் வந்திருந்தாலும் வீண்தான். இதேபோல் இந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் நேரமும் வீணடிக்கப்படும்.
எங்களது அலுவலகத்தை பொறுத்தவரை துறை சார்ந்த அடையாள அட்டை உள்ளது. அதை காண்பித்தாலே போலீசார் விட்டுவிடுவார்கள் என்று எங்களது உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் எங்கள் அலுவலகத்தில் உள்ள சில ஊழியர்களை இன்று அந்த அடையாள அட்டையை காண்பித்தும் அனுமதிக்கவில்லை. பெண் ஊழியர்கள் தங்களை அனுமதிக்கவில்லை என்று சொல்கிறார்கள். வெயிலில் அவர்களை நிற்க வைப்பது வேதனையாக இருக்கிறது.
இதுகுறித்து தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொண்டால், அடையாள அட்டையை காண்பித்தால் விட்டுவிடுங்கள் என போலீசாருக்கு நாங்கள் சொல்லியுள்ளோம் என்கிறார்கள். ஆனால் அதைக் காண்பித்தாலும் அனுமதிக்கவில்லை. அடையாள அட்டையை காண்பித்தால் அனுமதிக்கவில்லை என்று கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டால், இ-பாஸ் இருந்தால் போதும் விட்டுவிடுவார்கள். அதனை உங்கள் டிபார்ட்மெண்ட்டில் வாங்கவில்லையா? என்கிறார்கள். மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை தொடர்புகொண்டால், மாஸ்க் இருந்தால் விட்டுவிடுவோம் என்கிறார்கள். ஒவ்வொருவரும் மாறி மாறி இப்படி பதில் சொன்னால் என்ன செய்வது.
அரசு அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்கள் அடையாள அட்டை அல்லது வேறு என்ன ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும் என்று தெளிவாக அரசு ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் தெரிவித்துவிட்டால் இந்த பிரச்சனையில்லை. கரோனா காலத்தில் வேலைக்கு ஒவ்வொரு நாளும் உயிரை கையில் பிடித்தப்படி வந்து செல்கிறோம். இந்த நேரத்தில் இப்படிப்பட்ட பிரச்சனை வராமல் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.