Skip to main content

''மழைக்கால தவளையைப் போல் கத்தினார்கள் மலரும் மலரும் என்று'' - திருமா பேச்சு

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
nn

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் திமுக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்ற நிலையில் கோவையில் திமுக கூட்டணியின் வெற்றியை கொண்டாடுவதற்காக முப்பெரும் விழா நடத்தப்படும் என திமுக அறிவித்திருந்தது. அதன்படி இன்று திமுக கூட்டணி தலைவர்கள் பங்கேற்க கோவையில் முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது.

இதில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொல்.திருமாவளவன், துரை வைகோ, ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மேடையில் தொல்.திருமாவளவன் பேசுகையில், ''தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்கள் என அனைத்திலும் அடுத்தடுத்து வெற்றியைச் சந்தித்துள்ளது திமுக. இப்பொழுது நடந்து முடிந்திருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில், ஏன் இந்திய அரசியல் வரலாற்றில் இப்படி தொடர் வெற்றியைப் பெற்ற ஒரு கட்சி; ஒரு தலைமை எதுவுமே இல்லை. இதை நாம் வெளிப்படையாக பாராட்டியாக வேண்டும். அதற்குக் காரணம் அவருடைய அணுகுமுறை தான்; அவர் கையாளுகின்ற உத்திகள்தான்; அவருடைய ஆளுமைதான்; அவர் வழி நடத்தி வருகின்ற இந்தக் கூட்டணியின் பலன்தான்.

2019 க்கு முன்னரே காவிரி நீர் பிரச்சனையை ஒட்டி அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டணியை உருவாக்கினார். அது இன்றும் தொடர்கிறது. பொதுவாக தேர்தல் காலத்தில் கூட்டணிகள் அமையும் உடனே கலைந்து போய் விடுவார்கள், சிதறி போய்விடுவார்கள். அந்தக் கூட்டணியில் அடுத்த தேர்தல் வரை தொடர்வது கிடையாது. அதிமுக பாஜக கூட்டணி அப்படித்தான். ஆனால் திமுகவின் தலைமையில் உருவாகியுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னரே மக்களின்  பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து உருவான கூட்டணி. டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன்களை முன்னிறுத்தி உருவான கூட்டணி. அதுதான் இன்றைக்கும் தொடர்கிறது.

நான்கு தேர்தல்களைச் சந்தித்து இருக்கிறது. எந்தச் சலசலப்பும் இந்தக் கூட்டணியில் இல்லை; சிதறல் இல்லை. ஒரே நாள் சந்திப்பில் கூட்டணி கட்சிகளுக்குத் தொகுதிகளை பங்கீடு செய்து உடனே களத்துக்கு வேட்பாளர்களை அனுப்பியவர் அணியின் தலைவர், தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதுதான் அவருடைய ஸ்டேடர்ஜி. அதுதான் அவருடைய பலம். தொகுதிப் பங்கீடு செய்கின்ற போது கூட கூட்டணியை வெற்றிபெற வைக்க வேண்டும்; கூட்டணியில் உள்ள வேட்பாளர்கள் எந்த நிலையிலும் வெற்றி வாய்ப்பை இழந்து விடக்கூடாது அதில் கவனம் செலுத்துகிற ஒரு தலைவர்.

உதாரணத்திற்கு இதே கோவை தொகுதியில் போன முறை 2019-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை நீங்கள் கோவையில் போட்டியிட வேண்டாம் உங்களுக்கு நாங்கள் வென்ற  திண்டுக்கல் தொகுதி தருகிறோம். ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி, அந்தத் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கிவிட்டு கோவையில் இந்த ரிஸ்கை நாங்கள் எடுக்கிறோம். இங்கே ஒருவர் மழைக்காலத்து தவளையைப் போல் கத்திக் கொண்டு இருக்கிறார் 'தாமரை மலரும்.. தாமரை மலரும்..' என்று. திமுக வீழும், திமுக கூட்டணி வீழும் என்று உளறிக்கொண்டு இருக்கிறார். சாதிக்க போகிறோம் என்று நாடு முழுக்க நடந்து போகிறார். கோவையில் வெற்றி உறுதி உறுதி என்று திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருக்கிறார். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்களுக்கு வேண்டாம் அந்த ரிஸ்க் என திமுக போட்டியிட்டது. தமிழகத்தில் பாஜக எப்பொழுதும் வேரூன்ற முடியாது'' என்றார். 

சார்ந்த செய்திகள்