‘என்னை வில்லனாகப் பார்க்கின்றனர்’ எனச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வரும் ஆனந்த் வெங்கடேஷ், கடந்த கால ஆட்சியின் போது அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் வழக்குகளைத் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார். அந்த வகையில் அமைச்சர்களான பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட வழக்குகளைத் தாமாக முன்வந்து மீண்டும் விசாரித்து வருகிறார்.
அந்த வகையில் அமைச்சர் ஐ. பெரியசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி ஆகியோரின் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட வழக்கை நேற்று மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கு குறித்து நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவிக்கையில், “கீழமை நீதிமன்றங்களின் செயல்களைப் பார்க்கும் போது நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் என்னை வில்லனாகப் பார்க்கின்றனர். ஒவ்வொரு வழக்கிலும் விசாரணையை யாரும் எதிர்கொள்ள விரும்பவில்லை” எனத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை, அமைச்சர் ஐ. பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி ஆகியோர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.