அண்மையில் கேரளாவில் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கேரள மட்டுமல்லாது தமிழக்தில் உள்ள பல்வேறு அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள யா மொய்தின் எனும் பிரபல பிரியாணி கடையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
உணவு பாதுகாப்புதுறை அதிகாரி சதீஷ் தலைமையில் நடைபெற்ற சோதனையில் சிக்கன், மீன் உள்ளிட்டவை கெட்டுப்போன நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கெட்டுப்போன பொருட்கள் இருந்ததை அடுத்து அந்த ஹோட்டலின் சமையலறையை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பித்துள்ளனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள். 15 நாட்களுக்கு பிறகு நடத்திய ஆய்வு குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ், ''எங்களுக்கு வந்த புகாரில், 'வடபழனியில் உள்ள பிரபல ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கன் கொடுத்துள்ளார்கள், உடனடியாக நடவடிக்கை எடுங்கள்' என சொல்லியிருந்தார்கள். அதை பேஸ் பண்ணி இந்த கடையில் செக் பண்ண வந்தேன். இந்த கிச்சனில் வந்து செக் பண்ணும்போது பார்த்தால் டேட் முடிந்துபோன சிக்கன் நிறைய வைத்திருந்தார்கள். அந்த சிக்கனை எல்லாம் நாங்கள் கைப்பற்றி உள்ளோம். இதையெல்லாம் எடுத்து இப்போது அழித்து விடுவோம். சுமார் ஐம்பது, அறுபது கிலோ கெட்டபோன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கலாம். நாங்கள் இன்னும் வெயிட் போடவில்லை. இதில் கெட்டுப்போன இறைச்சியை லேபுக்கு அனுப்பப் போகிறோம். கண்டிப்பாக அதன் ரிப்போர்ட் வந்தவுடனே கடை மேல் உரிய நடவடிக்கை துறை மூலமாக எடுப்போம். கெட்டுப்போன இறைச்சி குறித்து கேள்வி எழுப்பினால் அவர்கள் பதில் சொல்ல மறுக்கிறார்கள்.
பில் கேட்டும் இதுவரை கொடுக்கவில்லை. அதற்காக காத்திருக்கிறோம். பில் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். இப்போதைக்கு இந்த ஹோட்டலின் கிச்சனை மூட உத்தரவிட்டுள்ளோம். திரும்ப நான் வந்து சோதனை செய்வேன். இதையெல்லாம் அவர்கள் சரி செய்ய வேண்டும். 15 நாட்கள் டைம் கொடுப்போம். 15 நாட்களுக்குள் இதையெல்லாம் செய்து விட்டு எங்களிடம் ரிப்போர்ட் கொடுத்தால் தான் எனக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே இந்த கடை நடப்பதற்காக சமையல் அறையை திறந்து வைப்போம். வாடிக்கையாளர்கள் புகார் கொடுத்தாலும், நாங்களாகவும் ரேண்டமாக வந்தும் சோதனை செய்வோம். அந்த மாதிரி நிறையக் கடைகளைச் சோதனை செய்து தரமில்லாத வகையில் இருந்தால் அவற்றை மூட உத்தரவிட்டுள்ளோம். எங்கள் உணவு பாதுகாப்புத்துறையைப் பொருத்தவரை இந்த கடையை மூட வேண்டும், அவர்களது பெயரை டேமேஜ் செய்யவேண்டும் என்றெல்லாம் இல்லை. நல்ல உணவு மக்களுக்கு கிடைக்க வேண்டும். அது ஒன்றுதான் எங்களுடைய முக்கிய இலக்கு. இது போன்ற தவறுகள் இனி நடக்காது என இவர்கள் எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் பிறகுதான் சமையலறையை திறப்போம்''என்றார்.