திருச்செந்தூரில் கோவில் யானையாக உள்ள தெய்வானை யானைக்கு பக்தர் ஒருவர் பழம் கொடுக்க முயன்றபோது யானை மிதித்ததில் சிசுபாலன் மற்றும் யானையின் பாகன் உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து யானை மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறது. செல்பி எடுக்க முயன்றபோது யானை மிதித்து தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்களும் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் திருச்செந்தூரில் தெய்வானை யானை தாக்கி யானைப்பாகன் மற்றும் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் பொன்முடி, ''தெய்வானை யானை அசாமில் இருந்து வந்தது என பத்திரிகைகளில் நீங்கள் படித்திருப்பீர்கள். அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் வளர்ந்தது. இருந்தாலும் அதைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வனத்துறை இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளில் வருங்காலத்தில் எடுப்போம். சில நேரங்களில் முறையாக யானைகளை பராமரிக்கவில்லை என்றால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது. திருச்செந்தூர் தெய்வானை யானையை வனத்துறை அனுமதி இல்லாமல் வைத்திருந்தார்கள். கோவிலில் யானைகளை சில நேரங்களில் அறநிலையத்துறை அதிகாரிகள் முறையாகப் பராமரிக்காததால் தான் இதுபோன்ற விபத்திற்கு காரணம்'' என தெரிவித்துள்ளார்.